சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் லட்சக்கணக்கான உயிர்களையும் பலிவாங்கியதை யாரும் மறந்து விட முடியாது. இந்த நிலையில் தற்போது சீனாவில் எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை போன்றே பாதிப்பை காட்டும் இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சீனாவின் வடக்கு மாகாணங்களில் அதிகளவு பரவி வரும் இந்த HMPV வைரஸால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். HMPV பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது குளிர்காலத்தில் சகஜம் தான் என சீன சுகாதாரத்துறை கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கையாக, சீனா HMPV சோதனைக்கான ஆய்வகங்களை அதிகரித்துள்ளது.
சீனாவில் HMPV வைரஸ் பரவலால் மற்ற உலக நாடுகளும் அலர்ட்டாக உள்ளன. இந்தியாவில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தை மற்றும் கர்நாடகாவை சேர்த்த 3 மாத குழந்தை என 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமீபத்திய வெளியூர் பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்ற போதிலும் வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. மேலும் குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
HMPV வைரஸ் புதிதல்ல, ஏற்கனவே இந்தியாவில் உள்ளது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள வைரஸ் சீனாவில் பரவும் அதே உருமாற்றம் அடைந்த வைரஸா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, பெங்களூரில் கண்டறியப்பட்ட வைரஸ் சாதாரண HMPV வைரஸா அல்லது சீனாவில் பரவும் வகையா என்று மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர். சாதாரண எச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் 0.78 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது.
HMPV வைரஸ் சளி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆனால் குழந்தைகள், வயதானவர்களுக்கு பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
சீனாவில் அதிகரித்த சுவாச நோய்கள் பற்றிய சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து எச்எம்பிவி மற்றும் பிற சுவாச வைரஸ்களைக் கண்காணித்து வருவதாக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ICMR மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மூலம் இயக்கப்படும் கண்காணிப்பு அமைப்புகளின் வலுவான நெட்வொர்க், நாடு முழுவதும் சுவாச நோய்த்தொற்றுகளை தொடர்ந்து கண்காணிக்கிறது.
நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தவும், நெறிமுறைகளை வலுப்படுத்தவும், அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) மூலம் ILI மற்றும் SARIக்கு உடனடியாகப் புகாரளிக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.