

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற SIR பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இதில் இறந்து போன வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் நடந்த இந்த பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக 19-ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் மட்டும் இடம் பெற்றிருந்தனர். இந்த SIR பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர்.
இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர், மற்றும் இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி தொடங்கிய நிலையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் நீக்கப்பட்டவர்கள், 1.1.2026 அன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்கள் போன்றோர் தங்களின் பெயரை சேர்க்க பல்வேறு கட்டங்களாக கடந்த டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4 மற்றும் 30-ம்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்ட போதிலும் தேர்தல் ஆணையத்தில் இத்தகைய முயற்சிக்கு பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.
அதாவது டிசம்பர் 18-ந் தேதி முதல் இதுவரை 16 லட்சத்து 72 ஆயிரத்து 874 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
அப்படியென்றால் நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரில் இப்போது, 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பம் அளித்து இருக்கிறார்கள்.
சுமார் 47 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் இல்லாத காரணத்தால் மனு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிற 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படலாம் அல்லது இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் கமிஷன் அறிவித்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி தேதி ஜனவரி 30-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதால், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற நிலையில் அதற்கான அறிவிப்பை இதுவரை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் இப்போது மனு கொடுத்தவர்கள் 22 லட்சம் பேர் அப்படியே சேர்ந்தாலும், வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 65 லட்சம் பேர் மட்டுமே இருப்பார்கள்.
அதேவேளையில், இந்த வரைவு பட்டியலில் பெயரை நீக்கம் செய்வதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த பெயர்கள் நீக்கப்பட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் தோராயமாக 5 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.
இந்த இறுதிப்பட்டியலின் அடிப்படையில் தான் தமிழகத்தில் வரப்போகும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களில் 47 லட்சம் பேர் மீண்டும் தங்களது பெயரை சேர்க்க மனு அளிக்காதது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.