

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக கடந்த 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேவையான ஆவணங்கள் இல்லாமை, இரட்டை பெயர்கள், முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் தகுதி உள்ளவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்களும் நடந்து வருகிறது. 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், கடந்த 27, 28-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும் வரும் ஜனவரி 3, 4 தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியின்(SIR) போது கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத அதாவது, விவரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அல்லது திருத்தம் மற்றும் சரிபார்ப்பு தேவைப்படும் 12 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. இந்த பணி பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நோட்டீசை பெறும் வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட ஆவணங்களை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் நிர்ணயிக்கும் விசாரணை நாளில் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர்களுடைய பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காலகட்டத்தில் அறிவிப்புகள் வழங்குதல், விசாரணைகள் நடத்துதல், சரிபார்ப்பு மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பான முடிவுகள் அனைத்தும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் சம நேரத்தில் மேற்கொள்ளப்படும். அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ந் தேதி வெளியிடப்படும்.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பினும், சில விவரங்கள் சரியாக இல்லாததால், தமிழகம் முழுவதும் 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையில் தான் அதிகம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 619 பேருக்கும், திருவள்ளூரில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 987 பேருக்கும், செங்கல்பட்டில் 63 ஆயிரத்து 373 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 56 ஆயிரத்து 479 பேருக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.
SIR படிவங்களில் 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளுக்கு தொடர்புடைய குடும்ப விவரங்கள் அல்லது உறவினர் விவரங்கள் சரியாக வழங்கப்படாதது, ஒரே வீட்டில் ஒரே பெயர் இரண்டு முறை வருதல், பெயருடன் முகவரி பொருந்தாமல் இருப்பது போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள படிவங்களுக்கு மட்டுமே இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் பெற்றவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
அப்படி நோட்டீஸ் வந்தும், அலுவலரை சந்திக்காமல் இருந்தால், அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.