சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள், மழைக்காலத்தில் மட்டும் எத்தனால் கலக்காத மாற்று கலப்பு எரிபொருளை வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர். ஈரப்பதம் மிக்க காலங்களில் எத்தனால் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் வாகன ஓட்டிகளிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்சனை மழைக்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும்.
வழக்கமாக எத்தனால் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது.பருவமழைக் காலத்தில் வழக்கமான பெட்ரோலைப் போல் இல்லாமல் எத்தனால் கலந்த பெட்ரோல் ,ஈரப்பதமான காற்றில் இருந்து நீரை எளிதில் உறிஞ்சுகிறது. இதனால் எரிபொருள் மாசுபாடு மற்றும் இயந்திர சேதத்திற்கு வழிவகுக்குகிறது. ஈரப்பதம் மிக்க கடலோரப் பகுதிகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது. கடற்கரை பிரதேசங்களில் எத்தனால் தண்ணீரை உறிஞ்சுகிறது , பின்னர் எத்தனால் அதன் செறிவூட்டல் நிலையை அடையும் போது அது பெட்ரோலிலிருந்து பிரிந்து, எரிபொருள் தொட்டிகளில் நீர், எத்தனால் மற்றும் பெட்ரோலியத்தின் தனித்துவமான அடுக்குகளை உருவாக்குகிறது. மழைக் காலங்களில் எரிபொருளை திறந்த வெளியில் விடும் பொது இந்த பிரியும் அடுக்குகள் தெளிவாக தெரிகின்றன.
நிலத்தடியில் சேமிக்கப்படும் படும் எரிபொருள் தொட்டிகளில் சீல் வைக்கப்பட்ட சேமிப்பு அமைப்புகள் இருந்தாலும் தொடர்ந்து ஈரப்பதம் உள்ளே சென்று கொண்டு தான் இருக்கிறது. முக்கியமாக கடலோரப் பகுதிகளில் இந்த நிகழ்வு அதிகமாக நடக்கிறது. இந்த விளைவுகளால் ஏற்படும் நீர் உள்ளடக்கம் எரிபொருள் தரத்தை குறைக்கிறது. அதிக எத்தனால் கலவைகள் தொடர்பான இயந்திர சேதம், எரிபொருள் ஆவியாதல் பிரச்சினைகள் மற்றும் நீர் மாசுபாடு தொடர்பான புகார்களை தொடர்ச்சியாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஈரப்பதம் உறிஞ்சும் பிரச்சினைகள் புவியியல் இருப்பிடம் மற்றும் காலநிலைகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடுகிறது.தெற்கு குஜராத் டீலர்கள் மழைக்காலங்களில் 20 % எத்தனால் கலப்பிலிருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். 20% எத்தனால் கலப்பினால் ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைப்பதாக எரிபொருள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் பிற தமிழக கடலோரப் பகுதிகளும் இதேபோன்ற சவால்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.மழைக்கால மாதங்களில் எத்தனால் கலந்த எரிபொருளுக்கு மாற்று வழிகளை எரிபொருள் விற்பனை நிலையங்கள் தேடுகின்றன.
பெரும்பாலான பெட்ரோல் பங்கில் உள்ள உள்கட்டமைப்பில், தீவிர ஈரப்பதம் உள்ள சூழ்நிலைகளில் எத்தனால் கலந்த எரிபொருளைக் கையாளத் தேவையான சிறப்பு உபகரணங்கள் இல்லை. அவர்கள் இன்னும் எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கான சிறப்பு சேமிப்பு தொட்டிகளை பயன்படுத்த தொடங்கவில்லை. இன்னும் பாரம்பரிய நிலத்தடி சேமிப்பு தொட்டிகள் மட்டுமே அதிகம் பயன்பாட்டில் உள்ளன. மேலும் எத்தனால் கலவைகளுக்குத் தேவையான ஈரப்பதத் தடைகள் அல்லது ஈரப்பதக் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதில் இல்லை.
சென்னையில் பருவ மழைக் காலத்தில் அடிக்கடி கனமழை மற்றும் அடிக்கடி பெட்ரோல் பங்குகளை வெள்ளம் சூழும் அபாயம் இருக்கிறது. முந்தைய காலங்களில் பெட்ரோல் பங்குகள் நீரில் மூழ்கி உள்ளன. இது போன்ற காரணங்களை காட்டி குறைந்தபட்சம் மழைக் காலத்திலாவது தங்களுக்கு சாதாரண பெட்ரோலை வழங்குமாறு, எண்ணெய் நிறுவனங்களிடம் சென்னையை சேர்ந்த எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.