

நாட்டில் கடந்த சில மாதங்களாக வெறிநாய்க் கடி விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாய்க் கடியில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாவட்டத்தில் தயிர் பச்சடி சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவகாரம், இணையத்தில் வைரலாகி உள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி, இறநதவருக்கு 13 ஆம் நாள் துக்க சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்ட போது, தயிர் பச்சடியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 4 நாட்களில் தயிர் பச்சடி சாப்பிட்ட அனைவரும், ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மருத்துவமனைக்குச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் வெறிநாய் கடித்த எருமை மாட்டிலிருந்து கறந்த பாலை தயிர் பச்சடி செய்ய பயன்படுத்தி உள்ளனர் என்பது பின்பு தான் தெரிய வந்தது. ஆகையால் பாலில் ரேபிஸ் தொற்று பரவியிருக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
வெறிநாய்க் கடித்த எருமை மாட்டை, உரிமையாளர் சில நாட்களாக தனிமைப்படுத்தி வைத்திருந்தார். இருப்பினும் இந்த எருமை மாட்டிலிருந்து பாலைக் கறந்து, மற்ற மாடுகளிடமிருந்து கறக்கப்பட்ட பாலுடன் கலக்கப்பட்டது. இந்தப் பாலை பயன்படுத்தி தான் துக்க நிகழ்ச்சியில் தயிர் பச்சடி செய்யப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 23ஆம் தேதி துக்க நிகழ்ச்சி சடங்கு நடைபெற்ற நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி வெறிநாய்க் கடித்த எருமை மாடு இறந்தது. மாட்டை பரிசோதித்துப் பார்த்த பின்னர், மாட்டிற்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இந்தத் தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிந்ததும், தயிர் பச்சடி சாப்பிட்ட தங்களுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சமடைந்தனர். வெறிநாய்க் கடித்த எருமை மாடு இறந்ததும், பிப்ரௌல் கிராம மக்கள் உடனே உஜ்ஜைனி சமூக சுகாதார மையத்தைத் தொடர்பு கொண்டனர்.
அப்போது மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் படியே அனைவரும் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இதன்படி டிசம்பர் 27ஆம் தேதி முதல் தயிர் பச்சடி சாப்பிட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது வரை 250க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலை காய்ச்சி குடிப்பதன் மூலம் ரேபிஸ் தோற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது தான் என லக்னோவை சேர்ந்த மருத்துவர் பகார் ரஸா தெரிவித்துள்ளார்.
மேலும் பதாவுன் முதன்மை மருத்துவ அதிகாரி ராமேஷ்வர் மிஷ்ராவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். ரேபிஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாக கிராமத்திற்குச் சென்று, பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் எனக் கூறியதோடு, தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிப்ரௌல் கிராமத்தில் யாருக்கும் ரேபிஸ் தொற்று தென்படவில்லை எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது கிராமத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.