அடுத்த மாதம் கரண்ட் பில்லில் 200 யூனிட் குறைக்கப்படுமா? - மின்வாரியம் சொல்வது என்ன?

அடுத்த மாதம் கரண்ட் பில்லில் 200 யூனிட் குறைக்கப்படுமா? என்ற பொதுமக்களின் சந்தேகத்திற்கு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
TN - EB Bill - Online
TN - EB Bill - Online
Updated on

கடந்த 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நடைமுறை மாறாமல் முக ஸ்டாலின் முதல்வராக இருந்த போதும் தொடர்ந்தது.

நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்று தவெக வெற்றி பெற்று விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கான திட்டத்தில் கையெழுத்திட்டார்.

இந்த புதிய அரசாணையின்படி இரு மாதங்களுக்கான மின்சார பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 2.23 கோடி குடும்பத்துக்கு தலா ரூ.235 மிச்சமாகும்.

500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை கடந்த (மே) 10-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து மின்சார கணக்கீட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆயிரத்தை தாண்டினால் ஆன்லைன் கட்டணம்- மின்சார வாரியம்!
TN - EB Bill - Online

அந்த வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மே 10 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 100 யூனிட்கள் வரையிலான இலவச மின்சாரப்பலனைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 210 யூனிட்டுக்கு ரூ.282 வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 210 யூனிட்டுக்கு 47 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது.

இது பல நடுத்தர ஏழை எளிய குடும்பங்களின் மின்சார சுமையை கணிசமாக குறைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் உண்மையான நுகர்வோரும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மக்களும் இத்திட்டத்தின் மூலம் இன்னும் அதிகமாகப் பயனடைவார்கள்.

இதற்கிடையே வீடுதோறும் மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான eb reading கணக்கிடும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான கட்டணம் eb reading எடுத்த 10 நாட்களுக்குள் கட்டவேண்டும் என்பது தான் நடைமுறையாகும்.

இந்நிலையில் மே 10-ம்தேதியில் இருந்து தான் 200 யூனிட் குறைப்புக்கான உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளதால் இந்த மாதம் வரும் மின்சார கட்டணத்தில் 200 யூனிட் குறைப்பு என்பது முழுவதுமாக இருக்காது என்றே தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான eb reading கணக்கிடும் பணி நடந்து வருகிறது. ஆனால் முதலமைச்சர் அறிவித்த 200 யூனிட் குறைப்பு நடைமுறை மே 10-ம்தேதியில் இருந்து தொடங்குவதால், மே, ஜூன் மாதங்களுக்காக ஜூலை மாதத்தில் கணக்கிடப்படும் eb reading தான் இந்த 200 யூனிட் குறைப்பு கணக்கிடப்படும் என்ற தகவல் மின்சார துறை அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பால் இந்த மாதத்தில் இருந்து மின்சார கட்டணம் முறையும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த பொதுமக்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.282 கரெண்ட் பில் கட்டியவர்களுக்கு இனி வெறும் ரூ.47 தான்..!
TN - EB Bill - Online

இதற்கிடையே இந்த தகவல் உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.

logo
Kalki Online
kalkionline.com