

எகிப்து தேசம் என்றதும் நம் நினைவுக்கு வருவது , பாரோ மன்னர்கள் கட்டிய மலை போன்ற மிகப் பிரம்மாண்டமான பிரமிடுகளும் பல்வேறு ரகசியங்களும் மர்மங்களும் நிறைந்த பாரோ மன்னர்களின் கல்லறைகளும் தான். எகிப்து மொழி, கலாச்சாரம், கட்டிடக்கலை, பண்பாடு ஆகியவை மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதைப்போல இந்தியாவின் நாகரீகமும் மிகவும் தொன்மையான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உடையது.
எகிப்து பிரமிடுகளில் உள்ள கல்லறைகளில் இந்திய மொழியை சார்ந்த தமிழ் மற்றும் பிராமி எழுத்துக்களை கொண்ட கல்வெட்டுக்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எகிப்தில் புகழ்பெற்ற "வேலி ஆப் கிங்ஸ்" என்ற இடத்தில் , 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டை சேர்ந்த வணிகர்கள் தங்களது அடையாளங்களை விட்டு சென்றுள்ளனர் என்பது தற்போதைய புதிய செய்தி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் நீண்ட கால நாகரிகம் உலக அரங்கில் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் அறிஞர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரெஞ்சு அறிஞர் சார்லட் ஷ்மிட் ஆகியோர் இணைந்து , பிரமிடுகளில் உள்ள பாரோ ரமேசஸ் VI மற்றும் 6 பாரோ மன்னர்களின் கல்லறைகளுக்குள் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சுமார் 30 கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர் , அந்த பழமையான கல்வெட்டுகளில் 20 கல்வெட்டுகள் தமிழ் மற்றும் பிராமி எழுத்துக்களில் உள்ளன. இந்த ஆய்வறிக்கை சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் கல்வெட்டியில் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டுகளில் 'சிகை கொர்ரான்' என்ற பெயர் எட்டு வெவ்வேறு கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சிகை என்பது தலைமுடியை குறிக்கக் கூடியது. கொர்ரான் என்பது தலைவர் அல்லது அரசன் என்று பொருள் கொள்ளலாம். ஒரு கல்வெட்டில் "சிகை கொர்ரான் - வர காந்தா" என்று எழுதப்பட்டுள்ளது.
அதன்படி"சிகை கொர்ரான் இங்கு வந்து பார்த்தான்" என்ற அர்த்தம் வருகிறது. இந்த கல்வெட்டு அங்கிருந்த கிரேக்க சுற்றுலாப் பயணிகளின் கல்வெட்டு முறையை பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. சிகை கொர்ரான் என்பவர் கிரேக்க மொழியை அறிந்திருக்கலாம் அல்லது அவர்களின் பாணியை பின்பற்றி இருக்கலாம்.
இந்த கல்வெட்டு கண்டறியப்படும் முன்னர் வரை தமிழ்நாட்டிலிருந்து வணிகர்கள் எகிப்து நாட்டின் 'பெரெனிகே' துறைமுகத்திற்கு மட்டும் வந்து சென்றதாக கருதப்பட்டது.
முன்பு எகிப்தின் குசைய்ர்-அல்-காதிம் பகுதியில் ஒரு பானை ஓட்டில் "பானை ஓறி" என்ற தமிழ் எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. புதிய தகவலின் படி தமிழ் வணிகர்கள் எகிப்தின் கடல் எல்லையையும் தாண்டி, நாட்டுக்குள் பயணம் செய்து வாணிபம் செய்ததை கல்வெட்டு உணர்த்துகிறது.
இந்த வணிகர்கள் பணம் ஈட்டும் நோக்கில் மட்டும் இல்லாமல், எகிப்தின் கலை மற்றும் கலாச்சாரங்களில் தங்களுடைய பதிவுகளையும் எழுதி வைக்க வேண்டும், என்ற சிந்தனையில் இருந்துள்ளனர். மேலும் அரசர்களின் கல்லறைகளில் தங்களின் பெயரை பொறிக்கும் அளவிற்கு செல்வாக்கும் பெற்று இருந்ததை இது காட்டுகிறது.
கல்வெட்டுகளில் தமிழ் மொழி மட்டுமல்லாது சமஸ்கிருதம் , பிராகிருதம், கரோஷ்டி உள்ளிட்ட மொழிகளும் உள்ளன.
இதனால், தமிழர்கள் மட்டுமன்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் வணிகர்கள் எகிப்து சென்றிருக்கலாம் அல்லது தமிழர்கள், தமிழ் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளையும் அறிந்திருக்கலாம் என்ற கூற்றை வெளிப்படுத்துகிறது. இது மட்டுமல்லாது மம்மிகளின் மூக்கில் மிளகுத் தூள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவும் பண்டைய கால தமிழர்களின் வாணிப வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் வரலாற்று பதிவு எகிப்தில் இருப்பது தமிழர்களுக்கு பெருமை தரும் ஒரு செய்தியாகும்.