காங்கிரசுக்கு உமர் அப்துல்லா கூறிய அறிவுரை!

Omar Abdullah
Omar Abdullah

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதை வைத்து இந்திய எதிர்க்கட்சி கூட்டணி தோற்றுவிட்டதாக கருதமுடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிஜோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்றதை வைத்து இந்திய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தோல்வி என்று கருத முடியாது. ஐந்து மாநில தேர்தலை பொறுத்தவரை இது காங்கிரஸ் கட்சிக்குத்தான் தோல்வி. ஏனெனில் இந்தியா கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடவில்லை. அந்தந்த மாநிலங்களில் அந்தந்த கட்சிகளும், வேறு சில கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. எனவே தேர்தலில் கிடைத்த தோல்வியை இந்திய கூட்டணிக்கு கிடைத்த தோல்வியாக கருதமுடியாது என்றார்.

தேர்தலில் வெற்றிபெற்றால் அதை கொண்டாடுங்கள். அதேநேரத்தில் தோல்வி கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்வதுதான் சரியான வழியாகும். எனக்குத் தெரிந்த பா.ஜ.க. நண்பர் ஒருவர், “இந்த முறை சத்தீஸ்கர் மாநிலத்தில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்” என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறினார். தேர்தல் நிலவரத்தை பா.ஜ.க.வால் முன்கூட்டியே கணிக்க முடியும் என்றால் காங்கிரஸால் ஏன் முடியாது? அதைவிடுத்து தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்பது முட்டாள்தனமானதாகும் என்றார் உமர் அப்துல்லா.

இதையும் படியுங்கள்:
தெலங்கானா முதல்வராகிறார் ரேவந்த் ரெட்டி!
Omar Abdullah

எந்த ஒரு மாநிலத்திலாவது பா.ஜ.க. தேர்தலில் தோற்றால், இது மாநில தேர்தல்தான். இது எந்தவிதத்திலும் பாதிக்காது என்பார்கள். தேர்தலில் வென்றுவிட்டால் இது பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் கிடைத்த வெற்றி என்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றிபெற்றது. ஆனால், அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. அதேபோல இந்த முறை நடக்கலாம் இல்லையா என்றார் உமர் அப்துல்லா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com