

'வொல்ஃப் மூன்' (Wolf Moon) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தோன்றும் முதல் முழு நிலவைக் குறிக்கும் பெயராகும். குளிர்காலத்தின் கடும் குளிரில், உணவிற்காக ஓநாய்கள் காடுகளிலும் மலைகளிலும் ஊளையிடும் சத்தம் அதிகமாகக் கேட்கும் காலம் என்பதால், பழங்குடியின மக்கள் இந்த நிலவிற்கு இப்பெயரைச் சூட்டினர். வானியல் ரீதியாக, இது ஆண்டின் தொடக்கத்தில் வரும் மற்ற முழு நிலவுகளை விட அதிக வெளிச்சமாகவும், பூமியின் வட அரைக்கோளத்தில் நீண்ட இரவைக் கொண்ட காலத்திலும் தோன்றுவது இதன் சிறப்பம்சமாகும்.
ஜனவரி 2026-ல் தோன்றும் இந்த வொல்ஃப் மூன், ஆன்மீகம் மற்றும் ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது புதிய தொடக்கங்கள், சுய ஆய்வு மற்றும் பழைய தேவையற்ற விஷயங்களைக் களைந்து முன்னேறுவதற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருப்பவர்கள் இந்த அதிசயத்தைக் காண மாலை சுமார் 6 மணிக்கு நிலவு உதிக்கும் போது இதைக் காண்பது சிறந்தது. இதற்கு விலையுயர்ந்த தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
2026-ல் வொல்ஃப் மூன் எப்போது?
வானியல் கணக்கீடுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் முழு நிலவான வொல்ஃப் மூன், வரும் ஜனவரி 3-ஆம் தேதி (இன்று சனிக்கிழமை) நள்ளிரவு மற்றும் ஜனவரி 4-ஆம் தேதி அதிகாலை வேளையில் வானில் முழுமையாகத் தெரியும். குறிப்பாக, இன்று இரவு வானம் தெளிவாக இருந்தால், நிலவின் பிரம்மாண்டமான அழகைக் கண்குளிரக் காணலாம்.
2026-ம் ஆண்டில் மொத்தம் 3 சூப்பர் மூன்கள் தோன்றவுள்ளன. அவற்றில் முதலாவது இதுவாகும். இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் பூமிக்கு மிக நெருக்கமான சூப்பர் மூன் டிசம்பர் 24-ஆம் தேதி தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது.