கடைசி ஊதியத்தில் 50% பென்ஷன் உறுதி..! புதிய TAPS திட்டத்தின் 6 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ!

stalin
stalinsource:twitter
Published on

"இன்றைய காலகட்டத்தில் பொறியியல் (Engineering) கல்விக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், அக்காலம் முதல் இக்காலம் வரை அரசுப் பணிக்கான மவுசு குறைந்ததே இல்லை. 'கால் காசு சம்பளம் என்றாலும் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைதான் வேண்டும்' என்ற சொலவடையே சொல்லும் இதன் சிறப்பை. காரணம் அரசுப் பணியில் கிடைக்கும் சலுகைகளுகளும் ஓய்வூதியமும் எனலாம்.

ஆனால் அவ்வப்போது அரசு ஊழியர்கள் தங்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் பெற போராட வேண்டியுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் நிரந்தரமாக வழங்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வரும் 6ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை அமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) கூட்டமைப்பு அறிவித்தது.

தொடர்ந்து, நேற்று (2-1-26) பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும் தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி ஓய்வூதிய திட்டத்தில் சிறு மாற்றம் செய்து அதன் அறிவிப்பை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவித்தனர்.

அதன் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் சலுகைகள் இதோ..

1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
2026-ல் இதெல்லாம் நடக்குமா.! பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள்.!
stalin

மேற்கூறிய TAPS (Tamil Nadu Social Assistance Programme) திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார்

11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மகிழ்வுடன் வரவேற்ற அரசு ஊழியர்கள் சங்கங்கள் உடனடியாக தலைமைச்செயலகம் விரைந்து இன்முகத்துடன் முதலமைச்சருக்கு இனிப்பு கொடுத்து நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.அரசின் இந்த இணக்கமான முடிவைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போராட்ட வாபஸ் மற்றும் புதிய திட்ட அறிவிப்பு ஆகியவற்றால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தற்போது பெரும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில், ஒரே நேரத்தில் மோதும் டாப் நிகழ்ச்சிகள்: குழப்பத்தில் ரசிகர்கள்! சன், விஜய், ஜீ தமிழில் எதைப் பார்ப்பது?
stalin

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com