

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை (CRZ - Coastal Regulation Zone) மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகளை (பங்களா) 15 நாட்களுக்குள் காலி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை (ECR) என்பது திருவான்மியூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்டுள்ள ஒரு அழகிய மற்றும் முக்கியமான கடலோரப் சாலையாகும். இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரை ரிசார்ட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலாச்சார மையங்களைக் கொண்டுள்ளது.
இந்த பகுதியின் கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக பல பிரபலங்களும், வசதி படைத்தவர்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து சொகுசு பங்களாக்களை கட்டி உள்ளனர். இந்நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில், CRZ-II (கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்) விதியை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகள் மற்றும் பங்களாக்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதாவது வீட்டின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வீடுகளைக் காலி செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு, இடிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த குடியிருப்போரின் மேல்முறையீட்டு மனுக்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நிராகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
CRZ-II விதிமுறைகளின்படி, 1991 ஆம் ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே இருந்த சாலைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உள்கட்டமைப்பு சார்ந்த உட்புற பகுதியில் (landward side) உள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி உண்டு.
இங்கு அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு (FSI) 0.8 ஆகும். ஆனால் கடலோரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட FSI (தள பரப்பளவு குறியீடு - 0.8) அளவுக்கு மேல் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது மற்றும் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, 192, 194 மற்றும் 197 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் 0.8-க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு அளவைக் கொண்டு விதிமுறைகளை மீறியுள்ளன.
அதேசமயம், சில இடங்களில் FSI (கட்டிடப் பரப்பளவு விகிதம்) 0.8-க்கு மேல் இருப்பதால், அக்குறிப்பிட்ட மூன்று வீடுகளின் உரிமையாளர்களிடமும், அனுமதிக்கப்பட்ட தளப் பரப்பளவு குறியீட்டு (FSI) விதிமீறல்கள் மற்றும் கட்டுமான மாறுதல்களை மீண்டும் சரிசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யக் கடற்கரையோரக் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடற்கரையோரம் உள்ள கட்டிடங்கள் (ECR வீடுகள்) குறித்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்;
இதன் மூலம் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும் என்று சென்னை மாநகராட்சி (GCC) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உண்மையில், சென்னை மாநகராட்சி 2020 ஆம் ஆண்டிலேயே சுமார் 700 விதியை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டியலைத் தயாரித்தது. இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்று, தேர்தல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்ற பல்வேறு காரணமாக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் தனிப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களிலும் விசாரணையில் இருந்தன.
தற்போது வரை, சுமார் 400 உரிமையாளர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மேலும் 400 பேர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் முறையிட்டுள்ள நிலையில், கூடுதல் செயலாளர் அந்த வழக்குகளை ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பே உரிய அரசு அனுமதி பெற்று, பல கோடிகளை முதலீடு செய்து கட்டப்பட்ட வீடுகள் இவை என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
தங்களது கட்டிடங்களுக்காகக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாகச் சொத்து வரி, மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் வரிகளை முறைப்படி செலுத்தி வருவதாகவும், அன்றைய காலகட்டத்தில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையிலேயே இந்தக் கட்டிடங்களில் பல கட்டப்பட்டதாகவும் அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
மேலும் அன்றைய காலகட்டத்தில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பழைய கட்டிடங்களுக்கு விலக்கு அளித்துவிட்டு, தற்போது புதிதாக சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டுமானங்களைத் தடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.