கோவை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் சுமார் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெற்றோர்களை அச்சுறுத்தியுள்ளது.
பொன்னுக்கு வீங்கி என்பது ஒரு வைரஸ் கிரிமியால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் ஏற்பட்டால் கன்னப்பகுதிக்கு கீழே கழுத்தின் ஒரு புறத்திலோ, இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும். காய்ச்சல் தலைவலி உடல் சோர்வு உடல்வலி பசியின்மை ஆகியவை ஏற்படும். இந்த நோய் பொதுவாக சிறுவர்களிடையே காணப்படும்.
இது பொன்னுக்கு வீங்கி பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மற்றும் இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது.
தற்போது இந்த நோய்தான் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் செயல்பட்டு வருகிறது பிஎஸ்ஜி மெட்ரிக் பள்ளி. இந்தப் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு இன்று பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த பள்ளிக்கு மார்ச் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிடிருக்கிறது. அதாவது, “நமது பள்ளியில் 21 மாணவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஆகவே மார்ச் 8 முதல் மார்ச் 12 வரை தற்காலிகமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, உங்கள் குழந்தைகளின் நலன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளில் யாருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனை பெறவும். முழுமையாக குணம் பெறும் வரை வீட்டிலேயே வைத்திருக்கவும்.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும் இதிலிருந்து தற்காத்துக்கொள்ள சுகாதாரமான உணவு முறைகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், எந்த அலட்சியமும் காட்டாமல், உடனே சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.