

ஒரே கல்லில் 25 அடி, 38 டன்! குமரி மயிலாடியில் உருவான பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை கேரளா கோவிலுக்கு பயணம் - கிரேன் மூலம் ஏற்றி அனுப்பி வைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறையைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் (ஸ்தபதி) மதன்குமார் மற்றும் அவரது குழுவினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியை மேற்கொண்டுள்ளனர். சுமார் 85 டன் எடையுள்ள ஒரே பாறைக்கல் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 6 மாத காலமாக இரவு பகலாகத் தீவிரமாகச் செதுக்கப்பட்டு இந்த ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர்.
இந்தச் சிலை, 5 அடி உயர பீடம் மற்றும் 19 அடி உயர ஆஞ்சநேயர் உருவம் என மொத்தம் 24 அடி உயரத்தில் அமைந்துள்ளது. செதுக்கி முடிக்கப்பட்ட பின் இதன் தற்போதைய எடை 40 டன் ஆகும்.பிரபஞ்சத்தின் 12 ராசிகள் மற்றும் 12 ஆதித்யர்களைக் (சூரிய வழித்தோன்றல்கள்) குறிக்கும் குறியீடாகவே இந்தச் சிலை 24 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளதாக ஸ்தபதி மதன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள பவுர்ணமி காவு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ராட்சத கிரேன் உதவியுடன் டாரஸ் லாரியில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இக்கோவிலில் ஆஞ்சநேயரின் ஐந்து சகோதரர்களின் சிலைகளுடன் இணைந்து இந்த சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. உலகிலேயே ஆஞ்சநேயர் தனது ஐந்து சகோதரர்களுடன் ஒரே ஆலயத்தில் காட்சியளிக்கப் போவது இதுவே முதல் முறை என்ற பெருமையைப் பெறுகிறது.உலகிலேயே ஆஞ்சநேயர் சகோதரர்களுடன் ஒரே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் முதல் நிகழ்வாக இது அமையப்போகிறது.
மயிலாடி சிற்பக் கூடத்தில் சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, ராட்சத கிரேன் (Giant Crane) உதவியுடன் மிகவும் பாதுகாப்பாகப் பன்னிரண்டு சக்கர டாரஸ் லாரியில் சிலை ஏற்றப்பட்டு கேரளாவுக்குப் புறப்பட்டது.திருவனந்தபுரம் செல்லும் வழியில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோவில் முன்பாக இந்த லாரி நிறுத்தப்பட்டது. அங்குத் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரிகள், பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு மாலைகள் அணிவித்து, தேங்காய் உடைத்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிஅனுப்பி வைத்தனர்.
வெற்றிலைமாலை :
எவ்வளவோ முயற்சி செய்தும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பவர்கள், காரியங்களில் ஏற்படும் தடைகள் விலகி வெற்றி கிடைக்க வேண்டும் என்பவர்கள் வியாழக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை வாங்கி சாற்றுவது சிறந்த பரிகாரம் ஆகும்.வெற்றிலை என்பது வெற்றிலை தரக் கூடியது என்பதால். வெற்றிலையில் மாலை கட்டி, வியாழக்கிழமை தோறும் அனுமனுக்கு அணிவித்து, உங்களின் வேண்டுதலை சொல்லி வழிபட்டு வந்தால் கண்டிப்பாக நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
அனுமனின் வால் வழிபாடு:
சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன. இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது.
இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது என்பது ஐதீகம். அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.