நெல்லையில் மூன்று வரங்களை அள்ளித்தரும் 'கெட்வெல் ஆஞ்சநேயர்' ஆலயம்!

Getwell Anjaneyar - ஆஞ்சநேயர் ஆலயம்
Getwell Anjaneyar - ஆஞ்சநேயர் ஆலயம்Ai Image
Updated on

தாமிரபரணி ஆற்றின் கரையில் பக்தர்களின் வாழ்வில் வளங்களை அள்ளித்தந்து அற்புதங்களை நிகழ்த்தும் அழகான ஆலயம் ஒன்று உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை, வாழ்வை நிம்மதியாகக் கழிக்கத் தேவையான செல்வம் (ஐஸ்வர்யம்), நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையத் தேவையான அனுகூலம் இவைதான் நாம் எப்போதும் இறைவனிடம் ப்ரார்த்திப்பது. இந்த மூன்று வளங்களையும் அருளும் தெய்வங்கள் ஒரே ஆலயத்தில் அருள்செய்தால் எத்தனை சிறப்பு வாய்ந்ததாக அந்த ஆலயம் இருக்கும். எங்கே இருக்கிறது இப்படிப்பட்ட ஆலயம்?

நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் ஆலயம்தான் இத்தனை சிறப்புகளையும் ஒருங்கே பெற்று பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குகிறது.

நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும், அதாவது குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நாம் விரும்புவதில், வேண்டுவதில், ப்ரார்த்திப்பதில் ஆரோக்கியம் முதலிடம் பிடிக்கிறது. ஆரோக்கியம் இருந்துவிட்டால் மற்ற செல்வங்களை நாம் ஈட்டிக்கொள்ளலாம். ஆரோக்கியத்தை நமக்கு அருள்பவர் தன்வந்தரி பகவான். தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியவர் தன்வந்திரி பகவான்.

இவரின் திருக்கரத்தில் உள்ள அமுத கலசத்தில் இருந்த அமுதத்தை அருந்தியபிறகே தேவர்கள் என்றும் அழியா வரம் பெற்றனர்.

எனவே உடல்நலம் சீராக இருக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் தன்வந்திரி பகவானை வேண்டுவது பழக்கம். மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி, சில குறிப்பிட்ட விஷ்ணு ஆலயங்களில் அருள்கிறார். இத்திருத்தலத்தில் பிரதான கடவுளாக, கையில் சங்கு சக்கரம், அமுத கலசம் கொண்டு, ஆதிசேஷன் குடைபிடிக்க தன்வந்திரி அருள்கிறார்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் பக்தருக்கு சிவன் காட்டிய அற்புதம்: ஒரே இரவில் மாறிய ராகவாச்சாரியின் கதை!
Getwell Anjaneyar - ஆஞ்சநேயர் ஆலயம்

பக்தர்களின் உடல்நலம் குறித்த ப்ரார்த்தனைக்காக அக்னி ஸ்வரூபமான தன்வந்திரி பகவானுக்கு இங்கு ஹோமம் செய்யப்படுகிறது. நீண்ட நாள் உடல் உபாதைகள் தீரவும், மன ஆரோக்கியம் குறித்த சிக்கல்கள் தீரவும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு தன்வந்திரி ஹோமம் செய்கிறார்கள். தன்வந்திரி ஜெயந்தியன்று விசேஷ திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் சிறப்பாக நடக்கிறது.

அடுத்து, வாழ்வில் வளங்களை அள்ளித்தரும் அன்னை மகாலக்ஷ்மித் தாயார், கனக மகாலட்சுமியாக இங்கே அருள்கிறார். தனிக்கோவில் தாயாராக, அன்னை கருணை பொங்க அமர்ந்திருக்கிறார். வழக்கமாக திருமால் அருளும் ஆலயங்களில் தாயாரும் தனிச் சந்நிதியில் அருள்வார்.

திருச்சானூர், நாமக்கல் போன்ற திருத்தலங்களில் தாயார் தனிக் கோவிலில் அருள்வதுபோல, இவ்வாலயத்தில் தனி சந்நிதியில் கம்பீரமாக, வெகு அழகாக கனக மகாலட்சுமி தாயார் அருள்கிறார்.

பதினாறு வகை செல்வங்களை பக்தர்களுக்கு அருளும் அன்னையாக தாயார் இங்கே அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பான பட்டு உடுத்தி, விசேஷ அலங்காரத்தில் தாயார் கண்கொள்ளா அழகில் அருள்புரிகிறார். மலர்ந்த முகத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களை வாரி அணைத்து, ஆறுதல்படுத்தி, நம்பிக்கையுடன் அனுப்பிவைக்கும் தாயாக கனக மகாலட்சுமி தாயார் அருள்கிறார்.

Getwell Anjaneyar - ஆஞ்சநேயர் ஆலயம்
Getwell Anjaneyar - ஆஞ்சநேயர் ஆலயம்AI Image

வரலக்ஷ்மி பண்டிகையின்போது தாயாருக்கு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்கிறார்கள். அன்று தாயாரைத் தரிசித்து, அவர் வாரி வழங்கும் வரங்களைப் பெற்று மகிழும் பக்தர்கள் ஏராளம். அதேபோல், திருமணம் போன்ற சுப காரியங்கள் மற்றும் குடும்பக் கஷ்டம் தீர்வதற்காகப் ப்ரார்த்தனை செய்து வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகள், தை வெள்ளிக்கிழமைகள், அட்சய திரிதியை போன்ற விசேஷ நாட்களில் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகின்றன.

இத்திருத்தலத்தில் மிகவும் பிரபலமாக, அனைவராலும் கொண்டாடப்படுபவர் ஆஞ்சநேயர். சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அனுகூலங்களை அருள்கிறார். அயோத்தியில் பால ராமராக பகவான் அருள்வதுபோல், இத்திருத்தலத்தில் இரண்டு வயது பாலகன் போன்ற அழகில், உயிரோட்டமான கண்களில் கருணை பொங்க எழுந்துருளும் ஆஞ்சநேயரைக் கண்டு மகிழ இரண்டு கண்கள் போதாது. அஷ்ட அம்சங்களுடன் அதாவது எட்டு வித அம்சங்களுடன் அனுமன் அருள்கிறார்.

 * விநாயகருடன் அனுமன் (ஆதி – அந்தம்)

 * வரம் தரும் வரத ஹஸ்தம்

 * இடது கரத்தில் கதாயுதம் (எதிரிகளை அழித்தல்)

 * மேற்கு நோக்கிய முகம் (நோய்களைத் தீர்க்கும்)

 * வடக்கு நோக்கிய வால் (நவக்கிரக அனுக்ரஹம்)

 * தெற்கு நோக்கிய பாதம் (ஆயுள் விருத்தி)

 * ருத்ராம்சம் (சிவலிங்க வடிவம்)

 * ஜீவ நேத்திரம் (உயிரோட்டமான கண்கள்)

1980 ல் ஸ்ரீ ஸ்ரீநிவாச பட்டாச்சார் அவர்களால் ஆஞ்சநேயர் மட்டும் அருளும் ஆலயமாக அமைந்தது இந்த ஆலயம். அப்போது கெட்வெல்(get well) என்ற பெயரில் அங்கே மருத்துவமனை இருந்ததால், அந்தப் பெயராலேயே கெட்வெல் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு 2010ல் கனக மகாலட்சுமி தாயாரும், 2015ல் தன்வந்திரி பகவானும் பிரதிஷ்டை செய்யப்பெற்று சிறப்பான ஆலயமாக மாறியுள்ளது.

இப்போதும் பக்தர்களின் செல்லப் பிள்ளையாக ஆஞ்சநேயர் இருக்கிறார். கெட்வெல் ஆஞ்சநேயர் என்ற செல்லப் பெயருடன் அனுமனை அழைக்கிறார்கள். அவரிடம் தங்கள் ப்ரார்த்தனைகளை மனமுருகி வேண்டிக்கொண்டு, அவற்றை அனுமன் சீராக்கி, குணமாக்கித் தந்து நலம் பெறுவதால் கெட்வெல் ஆஞ்சநேயர் என்ற திருநாமமே நிலைத்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
ஆரவல்லி சகோதரிகளை வீழ்த்திய வனபத்ரகாளியம்மன் கோவில் ரகசியம்!
Getwell Anjaneyar - ஆஞ்சநேயர் ஆலயம்

ஆஞ்சநேயருக்கு வாராவாரம் சனிக்கிழமைகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுவது இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருமணம் போன்ற சுப காரியங்கள் கூடி வரவும், அரசாங்க உத்தியோகம் மற்றும் நல்ல வேலை கிடைக்கவும் வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்காக ப்ரார்த்தனை ராஜ அலங்காரமும், கல்வி சிறக்கவும், வழக்கில் வெற்றி பெறவும், மன சங்கடங்கள் நீங்கவும் வெண்ணெய் காப்பு அலங்காரமும் சாற்றப்படுகிறது.

புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆஞ்சநேயருக்கு விசேஷமான வெண்ணைக் காப்பு, செந்தூரக் காப்பு, வடை மாலை, ராஜ அலங்காரம் போன்ற அலங்காரங்கள் இத்திருத்தலத்தில் வெகு பிரசித்தம். தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாளில் சுமார் ஒரு லட்சம் பழங்களால் விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் ப்ரார்த்தனை நிறைவேற வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். வாராவாரம் அனுமனுக்கு வடைமாலை சாற்ற, வாழ்வில் தீராத சிக்கல்கள் தீர்ந்து மன அமைதி கிடைப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். தாங்கள் தொடங்கும் நல்ல காரியங்கள், தொழில், கல்வி போன்ற எந்த நல்ல முயற்சிக்கும் அனுமனிடம் ப்ரார்த்தனை செய்தால் நல்ல பலன் கிடைக்கிறது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் எதிரில், சூர்யா மருத்துவமனை அருகில் இந்த ஆலயம் உள்ளது.வாழ்வின் அடிப்படைத் தேவைகளான ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அனுகூலம் ஆகிய மூன்று வரங்களும் ஒரே ஆலயத்தில் நிறைவாகக் கிடைக்கிறதென்றால் அதைவிட வேறு என்ன வேண்டும்.

இந்த ஆன்மீகப் பதிவை வாசிப்பதன் மூலம், உங்கள் குடும்பத்தின் தீராத உடல்நலக் குறைபாடுகளை நீக்கும் வழிகளையும், பொருளாதாரப் பற்றாக்குறையைத் தீர்த்து சகல காரியங்களிலும் வெற்றியைப் பெறுவதற்கான வழிபாட்டு முறைகளையும் அறிந்துகொள்வதோடு, நெல்லைக்குச் செல்லும்போது நீங்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு சக்திவாய்ந்த ஆன்மீகத் தலத்தைப் பற்றிய முழுமையான வழிகாட்டுதலையும் அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com