நேற்று தனுஷ்கோடியிலிருந்து 4 படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து, அவர்களின் படகையும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்வது வழக்கம். இது அடிக்கடி நடக்கும் சம்பவம் என்பதால், இதற்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று இந்திய கடற்படையினர் கைது செய்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
நேற்று நெடுந்தொலைவு சென்று மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகேதான் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், இலங்கை ராணுவம் அத்துமீறி கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24ம் தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களின் படகை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தான் படகு பறிமுதல் சம்பவத்தின்போது திடீரென்று இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், அந்நாட்டு மாலுமியின் மரணம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.