

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த பொங்கல் பண்டிகைக்கு கடந்த ஆண்டுகளை போல் ரொக்கப்பணம் கிடைக்கும் எதிர்பார்த்து காத்திருத்த மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரிரு நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 244 மொத்த ரேஷன் அட்டைதாரர்களில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வழங்குவதற்காக 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டியும், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குதல், டோக்கன்கள் வழங்குவது குறித்து அறிவுரைகளை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
* நியாயவிலைக்கடைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திடத் தேவைப்படும் டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்.முதல் நாளில் முற்பகல் மற்றும் பிற்பகலில் தலா 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் மற்றும் பிற்பகலில் தலா 150 முதல் 200 பேர் வரைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
* டோக்கன்களை சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் மட்டுமே விநியோகிக்க வேண்டும். நியாயவிலைக்கடையைச் சாராத வேறு நபர்கள் அல்லது அரசியல் சார்ந்த நபர்களைக் கொண்டு டோக்கன்கள் விநியோகம் செய்யக் கூடாது.
* டோக்கன்கள் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்து கொள்ளலாம்.
* அதிக கூட்ட நெரிசல், பிரச்சனை எழக்கூடிய நியாயவிலைக்கடைகள் காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
* அனைத்து நியாயவிலைக்கடையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதிய அளவில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டுள்ளதனை உறுதி செய்வதுடன், உரிய தரத்துடன் இருப்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் விநியோகம் குறித்த விவரங்களைத் தினந்தோறும் மாலை 5 மணிக்குள் தவறாது Google sheet வாயிலாகப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- இந்த அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி பொங்கல் தொகுப்பு மற்றும் டோக்கன்கள் விநியோகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திட கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.