
அமெரிக்காவின் மிகப் பெரிய 28 நகரங்களும் மெதுவாக மூழ்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த நகரங்களில் வசிக்கும் 34 மில்லியன் மக்களுக்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். விர்ஜினியா டெக் பல்கலைக்கழகத்தின் புவி கண்காணிப்பு மற்றும் புதுமைக் கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள், செயற்கைக்கோள் அடிப்படையிலான ரேடார் அளவீடுகளைப் பயன்படுத்தி, நிலத்தின் மூழ்குதல் (சப்சிடன்ஸ்) எனப்படும் நிகழ்வை இந்த நகரங்களில் ஆய்வு செய்தனர்.
அவர்களின் கண்டுபிடிப்புகளின்படி, ஆய்வு செய்யப்பட்ட அனைத்து நகரங்களிலும், குறைந்தபட்சம் 20 சதவீத நகர்ப்பகுதி ஆண்டுக்கு 2 மில்லிமீட்டர் வேகத்தில் மூழ்கி வருகிறது. 28 நகரங்களில் 25-இல், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நிலம் மூழ்குவதாகத் தெரியவந்துள்ளது. “நில மூழ்குதலால் உடனடியாக ஏற்படும் அபாயங்கள், உள்ளூர் வெள்ளப் பாதிப்பு, கட்டடங்கள், பாலங்கள், குழாய்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதம், அத்தியாவசிய சேவைகளில் ஏற்படும் தடைகள் ஆகியவை” என ஆய்வின் ஆசிரியரான உதவிப் பேராசிரியர் மனூச்சேர் ஷிர்ஸை தெரிவித்தார்.
ஆண்டுக்கு சில மில்லிமீட்டர்கள் மட்டுமே நிலம் மூழ்கினாலும், அது கட்டடங்களின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, புலப்படும் விரிசல்களை உருவாக்கும் என ஷிர்ஸை விளக்கினார். “ஹூஸ்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில், உள்ளூர் மூழ்குதல் ஏற்கனவே உள்கட்டமைப்பு பாதிப்புகளையும், புயல்களின் போது வெள்ள அபாயத்தையும் அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த மூழ்குதல் நிகழ்வுக்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் பயன்பாடு ஆகும். நகரங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தேவைப்படுகிறது. நகரங்கள் வளர வளர, இந்தத் தேவையும் அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் மட்டங்களிலிருந்து (அக்விஃபர்) நீர் எடுக்கப்படுகிறது. இவை, நீர் சேமிக்கப்பட்டிருக்கும் அல்லது நீர் பயணிக்க அனுமதிக்கும் பாறை அல்லது மண் அடுக்குகளாகும். ஆனால், இந்த நீர் மட்டங்கள் மீண்டும் நிரப்பப்படுவதை விட வேகமாக நீர் எடுக்கப்பட்டால், அவை சுருங்கி, மேலே உள்ள நிலத்தை இழுத்து மூழ்கச் செய்கின்றன.
“சான் பிரான்சிஸ்கோ அல்லது நியூ ஆர்லியன்ஸ் போன்ற மறுசீரமைக்கப்பட்ட அல்லது வண்டல் மண் அடுக்கு மீது கட்டப்பட்ட நகர மையங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை” என ஷிர்ஸை கூறினார்.
ஆய்வின்படி, நியூயார்க், சிகாகோ, சியாட்டில், டென்வர் உள்ளிட்ட ஒன்பது நகரங்கள் ஆண்டுக்கு சுமார் 2 மில்லிமீட்டர் வேகத்தில் மூழ்கி வருகின்றன. ஆனால், டெக்ஸாஸ் மாநிலத்தின் பல நகரங்கள் ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் வேகத்தில் மூழ்குகின்றன. குறிப்பாக, ஹூஸ்டனின் சில பகுதிகள் ஆண்டுக்கு 1 சென்டிமீட்டர் வேகத்தில் மூழ்குவது அதிர்ச்சியளிக்கிறது.
ஹூஸ்டன், நியூயார்க், லாஸ் வேகாஸ், வாஷிங்டன் டி.சி. போன்ற நகரங்களில், சில உள்ளூர் பகுதிகள் அருகிலுள்ள பகுதிகளை விட வேகமாக மூழ்குகின்றன.
“காலப்போக்கில், கடலோர மற்றும் வெள்ளப் பகுதிகளில்” நில மூழ்குதல் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது, என்று ஷிர்ஸை எச்சரிக்கிறார்.“ நிலம் மூழ்குவதோடு, கடல் மட்டமும் உயரும்போது, வெள்ளப் பகுதிகள் விரிவடைகின்றன, புயல் அலைகள் உள்நாட்டிற்கு மேலும் பயணிக்கின்றன.”
இந்த ஆய்வு, நில மூழ்குதலை கண்காணிக்கவும், அதன் விளைவுகளை குறைக்கவும், விஞ்ஞான அடிப்படையிலான திட்டமிடலுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என ஷிர்ஸை கூறினார். ஆய்வில் பட்டியலிடப்பட்ட 28 மிகப் பெரிய நகரங்கள்: நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, ஹூஸ்டன், பீனிக்ஸ், பிலடெல்பியா, சான் அன்டோனியோ, சான் டியாகோ, டல்லாஸ், ஜாக்சன்வில், ஆஸ்டின், ஃபோர்ட் வொர்த், கொலம்பஸ், சார்லோட், சான் ஜோஸ், இண்டியானாபோலிஸ், சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், டென்வர், வாஷிங்டன் டி.சி., நாஷ்வில், ஓக்லஹோமா சிட்டி, எல் பாசோ, பாஸ்டன், போர்ட்லாண்ட், லாஸ் வேகாஸ், டெட்ராய்ட் மற்றும் மெம்ஃபிஸ்.
இந்த ஆய்வு நேச்சர் சிட்டிஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.