மும்பை தீயணைப்பு படையின் முதல் பெண் வாகன ஓட்டுநர்: சாதனை படைத்த பல்லவி பாட்டீல்!

முதல் பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநர்
முதல் பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநர்Source:Freepressjournal
Updated on

முதல் பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநராக மும்பை தீயணைப்பு படையில் பதவி ஏற்று பல்லவி பாட்டீல் என்பவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 29 வயதான இவர், நீண்டகாலமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்த துறையின் தடைகளை உடைத்து, மற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்.

யார் இந்த பல்லவி பாட்டீல் .?

இவர் ஒரு தீயணைப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் தன் அண்ணனுடன் தீயணைப்பு பயிற்சிக்கு சென்றபோது, தானும் ஒரு நாள் இந்த சீருடையை அணிய வேண்டும் என விரும்பினார். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தொடர்ந்து பாடுபட்டார். 2017ம் ஆண்டு இவர் தீயணைப்பு பெண்ணாக (Firewoman) பணியில் சேர்ந்தார். கடினமான பயிற்சிகளை முடித்து, தற்போது தீயணைப்பு வாகனத்தை ஓட்டி இயக்கும் முதல் பெண்ணாக உயர்ந்துள்ளார்.

மும்பை போன்ற பெருநகரங்களில் அவசர காலங்களில் வினாடிகளில் செயல்பட வேண்டும். தாய்மையையும், உயிரைக் காக்கும் இந்த சவாலான பணியையும் இவர் மிகச்சிறப்பாகச் சமநிலை செய்து வருகிறார்.

மும்பையில் நடந்த 26/11 தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பெண்களை தீயணைப்பு படையில் சேர்க்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது மும்பை தீயணைப்பு படையில் 116 பெண் தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.பல்லவி பாட்டீல் தீயணைப்பு துறையின் வாகன டிரைவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முனபாக,கோரேகாவில் உள்ள தீன்தோஷி பணிமனையில் சிறப்பு பயிற்சி பெற்றவர்.

தற்போது மும்பை பாந்த்ரா தீயணைப்பு நிலையத்தில் பணியிலுள்ள பல்லவி பாட்டீல், அங்குள்ள ஒரே பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநராகத் திகழ்கிறார்.

முதல் பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநர்
முதல் பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநர்source:freepressjournal

இது குறித்து பல்லவி கூறுவது :-

MIDC யில் தீயணைப்பு வீரராக பணி புரியும் எனது சகோதரர் தனியாக அநேக பயிற்சிகளை கிராமத்தில் மேற்கொள்வது வழக்கம். தனியாக அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு செல்கையில் சிரமம் ஏற்பட்ட காரணம், என்னையும் தன்னுடன் வரக் கூறுவது வழக்கம். நானும் ஆர்வத்துடன் செல்வேன். சகோதரர் செய்யும் பயிற்சிகளை நானும் செய்வது வழக்கம்.

எங்கள் இருவரையும் தீயணைப்புப் படையில் சேர ஊக்கமளித்தவர் எங்கள் தந்தை தான். தீயணைப்பு படை வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு ஆரம்பமானபோது, என்னை மும்பைக்கு அழைத்து வந்தது தந்தையே. அவரது நம்பிக்கையை உறுதிப் படுத்தும் வகையில், தேர்வு செயல்முறைகளில் தேர்ச்சி பெற்று கடுமையான பயிற்சிகளை நல்லபடியாக முடித்து இப் பணியில் சேர்ந்தது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

ஹிப்-ஹிப் ஹூரே பல்லவி!

உபரி தகவல்கள் :

மும்பை தீயணைப்பு படை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தீ விபத்து, பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர மீட்பு உதவிகளுக்கு 101 என்ற எண்ணை அழைக்கலாம்.

  • தீயை அணைத்தல்;

  • கட்டிட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பது;

  • சாலை மற்றும் ரயில் விபத்து மீட்பு;

  • வெள்ளம் மற்றும் நச்சு வாயு கசிவு மேலாண்மை;

  • பறவைகள் மற்றும் விலங்குகள் மீட்பு

போன்ற பல சேவைகளை மும்பை தீயணைப்பு படை திறம்பட செய்து வருகின்றன.

மும்பை பெருநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 34 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. ஹைட்ராலிக் ஏணிகள், ஜம்போ டேங்கர்கள், நவீன தீயணைப்பு வாகனங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்தியாவில் உள்ள தீயணைப்புப் படைகளிலேயே, மும்பை தீயணைப்புப் படைக்கு மட்டுமே சொந்தமாக ஒரு கொடி உள்ளது.

இதன் முழக்கங்களாக சம்ஸ்கிருத மொழியில் சௌர்யம் (வீரம்), ஆத்மசம்யமனம் (தன்னடக்கம்), தியாக (தியாகம்) ஆகியவைகள் பொறிக்கப்பட்டுள்ளன என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:
திரைக்கதை மன்னன் பாக்யராஜின் அரசியல் முகம் பற்றி தெரியுமா..?
முதல் பெண் தீயணைப்பு வாகன ஓட்டுநர்
logo
Kalki Online
kalkionline.com