

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதோடு கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்லும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.
கடுமையான காலத்திலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. மாறாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் விதமாக மார்ச் 27-ல் கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு. ஆனால் வாட் வரியைக் குறைக்க மாநில அரசுகள் முனவரவில்லை.
இந்நிலையில் கடந்த 9 நாட்களில் ரூ.5 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. போர் தொடரும் பட்சத்தில் இந்த விலை உயர்வு மேலும் நீடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் ஒரு பகுதியை நுகர்வோருக்கு மாற்ற, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. இதனால் தான் கடந்த 9 நாட்களிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு ரூ.94.77-இலிருந்து ரூ.99.51 ஆக உயர்ந்தது. டீசல் விலை 1 லிட்டருக்கு ரூ.87.67-இலிருந்து ரூ.92.49 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையுயர்வு கிட்டத்தட்ட 5% என்பது குறிப்பிடத்தக்கது.
மே 15-ல் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டது. 4 நாட்களுக்குப் பின், மே 19-ல் பெட்ரோல் 87 காசுகளும், டீசல் 91 காசுகளும் உயர்த்தப்பட்டன.
இன்று (மே 23) பெட்ரோல் 87 காசுகளும், டீசல் 91 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னையில் 3 முறை விலை உயர்த்தப்பட்ட பிறகு தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.33, டீசல் ரூ.97.00-க்கு விற்பனையாகிறது.
பிப்ரவரி 28-ல் தொடங்கக 3 மாதங்களாக நடந்து வரும் அமெரிக்கா - ஈரான் போர், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 40%, எல்என்ஜி இறக்குமதி 50% மற்றும் எல்பிஜி இறக்குமதி 90% வரை பாதிக்கப்பட்டுள்ளது.
3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வை உயர்த்தினாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இன்னமும் இழப்பு என்றே சொல்லப்படுகிறது.
பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் அறிக்கையில், அமெரிக்கா - ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னர், 2026 பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $69.01 ஆக இருந்தது. தற்போது 1 பேரல் கச்சா எண்ணெய் $109.31 ஆக உயர்ந்துள்ளது.
3 மாதத்திற்குள் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு $40.3 அதாவது, 58.39% உயர்ந்திருப்பதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%, எல்பிஜி தேவையில் 60%-ஐ உலகச் சந்தையிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இதில் சுமார் 40% கச்சா எண்ணெயும், 90% எல்பிஜி-யும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே இந்தியாவுக்கு வருகிறது. ஹார்மூஸ் தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான மொத்த செலவு சுமார் 60% வரை அதிகரித்துள்ளது.