போக்குவரத்துக் கழகங்களில் 30000 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்!

போக்குவரத்துக் கழகங்களில் 30000  காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்!
Published on

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், ஒரே நேரத்தில் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் " தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களில் 600 முதல் 700 பணியாளர்கள் அடுத்த சில நாட்களில், அதாவது ஜூன் 30-ஆம் நாளுடன் ஓய்வு பெற இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், அவர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கவலையளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு புதிய ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், பல பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

அதனால், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இயங்க வேண்டுமானால் காலாவதியாகும் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும்.

ஓய்வு பெறும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாற்றாக புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும்.

ஆனால், அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக புதிய ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பணியமர்த்தப்படவில்லை என்பது மட்டுமின்றி, 7 ஆண்டுகளில் வாழ்நாள் காலம் முடிவடைய வேண்டிய பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக முடங்குகின்றன.

இந்தியாவில் மிகவும் வலிமையான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் அதன் செயல்திறன் படிப்படியாக குறைந்து வருகிறது என கூறியுள்ளார். எனவே அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com