பள்ளிக் கட்டணம் மற்றும் கல்வி நிறுவனக் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற போலியான மின்னஞ்சல் மோசடி மூலம், இதுவரை குறைந்தபட்சம் $38,000 (சுமார் ₹31 லட்சம்) திருடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் இது போன்ற 16 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியில், சைபர் கிரிமினல்கள் கல்வி நிறுவனங்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்து, மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்தும்படி அவசர மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர்.
குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மின்னஞ்சல்களில் அச்சுறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், பள்ளியை நேரடியாகத் தொடர்பு கொண்டு சரிபார்த்த பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.
இந்த மோசடி குறித்து 'தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், டெமாசெக் பாலிடெக்னிக் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு, மற்ற மாணவர்களுக்குப் போலியான கட்டண மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களில், “temasekpolytechnic.online” என்று முடியும் ஒரு மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. இது போலியான வலைத்தள முகவரி என்றும், அதிகாரப்பூர்வ முகவரி அல்ல என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம், இந்த மோசடி குறித்து ஆகஸ்ட் 22 அன்று பெற்றோர்களுக்கு 'பேரண்ட்ஸ் கேட்வே' செயலி மூலம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை உடனடியாக நீக்கிவிடுமாறும், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசியக் கல்வி நிறுவனம், சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ரிபப்ளிக் பாலிடெக்னிக் போன்ற பல கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளன.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு போலீசார் அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான கட்டண கோரிக்கைகள் வந்தால், அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் கல்வி நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு சரிபார்க்க வேண்டும்.
மேலும், தெரியாத நபர்கள் அனுப்பும் இணைப்புகள் (links) அல்லது QR குறியீடுகளைப் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்யவோ, செயலிகளைப் பதிவிறக்கவோ கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். மெயில் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடி என்பதால் சிங்கப்பூர் மட்டுமல்ல மற்ற நாடுகளும் உஷாராக இருப்பது நல்லது.