

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றாகும். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்தாண்டு டிசம்பர் 8-ம்தேதி வெகு விமர்சியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் உள்ள சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் உற்சவர் சிலைகள் 1,500 ஆண்டுகள் தொன்மையானது.
இந்த சிலைகள் கடந்த 2015-ம் ஆண்டு சேதமானதால், புதிதாக சிலைகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி புதிய சிலை செய்வதற்கு தங்கம் 5 சதவீதம், வெள்ளி 1 சதவீதம், பித்தளை 12 சதவீதம், செம்பு 80 சதவீதம், ஈயம் 2 சதவீதம் என மொத்தம் 55 கிலோ எடையில் புதிதாக 2 உற்சவர் சிலைகள் செய்யப்பட்டது.
புதிதாக சிலைகள் செய்ததில் மோசடி நடந்திருப்பதாக, காஞ்சீபுரத்தை சேர்ந்த அண்ணாமலை சிவகாஞ்சி போலீசாரிடம் 2017-ம் ஆண்டு புகார் செய்தார். அப்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, கோவில் அர்ச்சகர்கள் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புதிய உற்சவர் சிலைகளை ஐ.ஐ.டி. நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ததில் சிறு அளவு கூட தங்கம் சிலை செய்வதற்கு பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் புதிய உற்சவர் சிலை செய்ததில் நடந்த தங்க மோசடி வழக்கு விசாரணை தற்போது காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது.
கடந்த 30-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிவகாஞ்சி போலீசார் தாக்கல் செய்த ஆவணத்தின் நகல், வழக்கு தாக்கல் செய்த காஞ்சீபுரத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு, வழங்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த திருத்தப்பட்ட எப்.ஐ.ஆர். மற்றும் ஐ.ஐ.டி., ஆய்வறிக்கை குறித்த விவரங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் மூலம், சோமாஸ்கந்தர் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் செய்ய பக்தர்களிடம் இருந்து, 312½ சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்ற விவரம் தற்போது அம்பலமாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட 312½ பவுன் தங்கத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடியே 12 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.