கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: புதுச்சேரி,தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு..!

மாநாட்டை புறக்கணித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; மாமல்லபுரம் சுற்றுலாத் தளங்களில் தற்காலிகக் கட்டுப்பாடுகள்!
தென்மண்டல முதல்வர்கள் மாநாடு
தென்மண்டல முதல்வர்கள் மாநாடுsource:Dailythanthi
Updated on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை கோவளத்தில் இன்று நடைபெறும் தென் மண்டல மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவளம் சென்றிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

கோவளத்தில் தென்மண்டல மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெறுவதால் மாமல்லபுரம் கடற்கரை கோவில் ஐந்து ரதம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விரிவாகச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிலையில் இந்த மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெறும் 31 -வது தென்மண்டலக் குழு மாநாடு (Southern Zonal Council Meeting) கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரவேற்புரை நிகழ்த்துவார் என்றும் மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா முதலமைச்சர்கள் மற்றும் தென் மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாநில தலைமைச்செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சுழற்சி முறையில் நடத்தப்படும் இம்மாநாட்டின் 30-வது கூட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது தமிழ்நாட்டில் நாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் இதன் நிரந்தரத் தலைவராகவும், மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதலமைச்சர் அந்த ஆண்டிற்கான துணைத் தலைவராகவும் செயல்படுவர். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் இம்மாநாட்டுக்கு முதலமைச்சர் விஜய் துணை தலைவர் பதவி வகிப்பது சிறப்பு.

தென் மாநிலங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து முதல்வர்கள் ஒன்றிணைந்து ஆலோசித்து, மத்திய அரசிடம் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை முன்வைப்பதே தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம், நிதி மற்றும் நிர்வாக உரிமைகள் குறித்து விவாதித்தல். மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்கு, நிதிக்குழு பரிந்துரைகள் போன்றவற்றில் தென் மாநிலங்களின் நிலைப்பாட்டை ஒருங்கிணைத்தல்.காவிரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஆலோசித்தல். மாநிலத்தின் சாலை, ரயில், துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல். முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் தென் மாநிலங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல மாநில பிரச்சினைகள் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுருக்கமாக “தென் மாநிலங்களின் பொதுவான பிரச்சினைகளை ஒரே குரலில் முன்வைத்து, கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான ஆலோசனை மேடையாக” தென்மண்டல முதல்வர்கள் மாநாடு செயல்படும் என அறியப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் தெலங்கானா, புதுச்சேரி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிலையில் புதுச்சேரி முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதுடன் ரங்கசாமியுடன் அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில் அவர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பதவியேற்று பல நாட்களாகியும் துறைகள் ஒதுக்கப்படாமல் இருப்பதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனவும் தொகுதி வளர்ச்சிப் பணிகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.

இந்த பிரச்சினை ஒரு புறம் இருக்க தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க நிர்வாகியான துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்ததாகவும் இந்த மாநாட்டில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்பதை ஆளுநர் மாளிகை உறுதி செய்துள்ளது. ஆனால் இம்மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகி நூறு நாட்கள் கடந்தும் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவில்லை என்பதும் அரசியலில் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

மேலும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காததற்கு மாநாட்டில் பேசும் வாய்ப்பு முதலில் துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டது காரணமாக இருக்கலாம் என்றும் அதே நேரம் முதல்வர் கூட்டத்தில் பங்கேற்காததற்கு தாங்கள் காரணமல்ல என்று துணை நிலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் என்பதால் முதல்வரை விட துணை நிலை ஆளுநரே அதிகாரம் மிக்கவர் என்று சொல்லப்படும் நிலையில் தங்கள் பிரச்சினைகளை பேச வாய்ப்பு கிடைத்தும் முதல்வர் ரங்கசாமி ஏன் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதே போல் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்றும் தெலுங்கானா சார்பில் துணை முதல்வர் மல்லுப்பட்டி விக்ரமார்கா பங்கேற்பு புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்..! 6 படங்கள்... 6 கதைகள்!
தென்மண்டல முதல்வர்கள் மாநாடு
logo
Kalki Online
kalkionline.com