
தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நாளை (12-ந் தேதி) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காவலர், பில் கலெக்டர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நாளை காலை நடைபெறுகிறது.
குரூப்-4 தேர்வு நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ளது.
தேர்வர் எழுதுபவர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை நடைபெறும் தேர்விற்கு 9 மணிக்கு மேல் தாமதமாக வரும் எந்தவொரு தேர்வரையும் தேர்வு மையத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வை தமிழகத்தை பொறுத்தவரை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுதுகின்றனர். தலைநகர் சென்னையில் பொறுத்த வரை 311 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்றும், இதில் 94 ஆயிரத்து 848 பேர் பங்கேற்பதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு பணியில் 4,500 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெற்றது.
மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்கள் தேர்வெழுதுவதற்கு தரை தளத்திலேயே தேர்வு அறையினை அமைத்துத் தரப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் வழக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடத்தில் தேர்வு எழுத வருபவர்கள் எந்தவித மின்னணு உபகரணங்களையும் எடுத்து வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகாக்களில் 59 கல்லூரிகள் மற்றும் 115 பள்ளிகள் என 174 தேர்வு மையங்களில் 48 ஆயிரத்து 323 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.