துருக்கியின் தலைநகரம் அங்காராவிற்கு அருகிலுள்ள துருக்கியின் விண்வெளி பாதுகாப்பு நிறுவனமான ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் கட்டடத்திற்கு வெளியே பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதேபோல், அருகில் இருந்தவர்களுக்கு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலை எந்த குழு நடத்தியது என்று தெரியவில்லை. எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவும் இல்லை.
எனினும் இந்தத் தாக்குதல் குர்திஷ் புரட்சிக் குழுவால் (PKK) நடத்தப்பட்டிருக்கலாம் என்று துருக்கிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, “இந்த கொடூரமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். கடைசி பயங்கரவாதியை வீழ்த்தும் வரை நமது போராட்டம் உறுதியுடன் தொடரும். வீர மரணம் அடைந்தவர்களுக்கு கடவுள் கருணை காட்டட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்."
தலைநகருக்கு வெளியே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நுழைவாயிலைச் சுற்றி குறைந்தது இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவதை காட்டும் வீடியோக்கள் சமூக தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் குண்டு வெடிக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளை அடையாளம் காணும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர், அதற்கேற்ப பயங்கரவாதக் குழுவின் பெயர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
துருக்கி நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக தேசிய விண்வெளி நிறுவனம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் துருக்கி பாதுகாப்புத் துறை, வெளிநாட்டைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்காக கடந்த 1973 ஆம் ஆண்டு, துருக்கியின் தொழில்நுட்ப அமைச்சகம் இதை தொடங்கியது. இது ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களையும் போர் விமானங்களையும் தயாரித்து வருகிறது.