
கோவை அவிநாசி சாலை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கிலோமீட்டர் தூரம் பைபாஸ் சாலை உள்ளது. இது தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கியமான சாலை.
இந்நிலையில் நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான எல்.அண்டு.டி பைபாஸ் சாலையில் ஆகஸ்ட் 1 முதல் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை இருவழிச்சாலையாக குறுகியதாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. ராவத்தூர், வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி, போடிபாளையம், நாச்சிபாளையம், சிந்தாமணி புதூர் பிரிவுகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த சாலையை தரம் உயர்த்தி விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சாலையை விரிவுபடுத்துவதற்கான அறிக்கையை தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் அறிக்கை தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நீலாம்பூர் சுங்கச்சாவடி, சிந்தாமணிபுதூர் அருகே உள்ள 2 சுங்கச்சாவடி, கற்பகம் பல்கலைக்கழகம் அருகே சாலையின் இருபுறமும் உள்ள சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட உள்ளன.
மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் கோவை பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.