
வாஸ்து சாஸ்திரத்தில், ஆமை அதன் நீண்ட ஆயுள் மற்றும் உறுதியின் காரணமாக ஒரு புனிதமான சின்னமாகக் கருதப்படுகிற. ஆமை சிலைகளை வீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதால் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைப் பெற்று மன அமைதியுடன் வாழலாம் என நம்பப்படுகிறது. நமது புராணங்களில் கூட மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாக ஆமை (கூர்மம்) உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வீட்டில் ஆமை சிலையை வைப்பது செழிப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது. ஆனால், அதை வைப்பதில் சில விதிமுறைகள் உண்டு என்பதையும் கவனிக்க வேண்டும். அது குறித்து இப்பதிவில் காண்போம்.
வாஸ்து சாஸ்திரம் போன்ற சீனக் கலையான ஃபெங் சுய் (Feng Shui) ஆற்றல் சக்திகளைப் பயன்படுத்தி சூழலில் நல்லிணக்கத்தை அடைய உதவுகிறது. ஃபெங் சுய்யில், ஆமைகள் முக்கிய குறியீடாக, நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. ஆமை சிலையை எங்கு வைத்தால் பணம், அன்பு, மகிழ்ச்சி போன்றவற்றை ஈர்க்கும் என்று ஃபெங் சுய்யின் குறிப்புகள் கூறுகின்றன.
பணம் மற்றும் செழிப்புக்காக: வீட்டின் தென்கிழக்கு பகுதி செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. இங்கு ஆமை சிலையை வைப்பது நிதி சம்பந்தமான வெற்றியை ஈர்க்கும். அதேபோல். பணப் பெட்டி அல்லது பெட்டகத்திற்கு அருகில் ஒரு ஆமை சிலையை வைப்பது செல்வத்தை ஈர்க்க உதவும். காசுகளைப் போட்டு அதன் மேல் இச்சிலைகளை வைப்பது சிறப்பு.
காதல் மற்றும் உறவுகள் மேம்பட: வீட்டின் தென்மேற்கு பகுதி உறவுகள் மற்றும் காதலுடன் தொடர்புடையது. இங்கு ஆமை சிலையை வைப்பது உறவுகளுடனான நேர்மறை ஆற்றலுடன் கூடிய நல்லிணக்கத்தைய ஈர்க்க உதவும். படுக்கையறையில் ஒரு ஆமை சிலையை வைப்பது கணவன். மனைவி உறவுகளில் அன்பை விதைத்து நிலைத்தன்மை மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும்.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெற: கிழக்கு அல்லது தென்கிழக்கு பகுதியில் ஆமை சிலையை வைப்பது நல்ல ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவும். பொதுவாகவே. ஆமைகள் தண்ணீருடன் தொடர்புடையவை என்பதால் மீன் தொட்டிகள் அல்லது நீரூற்று போன்ற நீர் அம்சத்திற்கு அருகில் இதுபோன்ற சிலையை வைப்பது நல்ல ஆரோக்கியத்தை தரும் என்பது பலரின் நம்பிக்கை.
ஆமை சிலைகளை வைப்பதில் திசைகளை மட்டுமே கருத்தில் கொண்டால் போதாது. இந்தச் சிலை இருக்கும் இடங்கள் மற்றும் அந்த இடங்களை சுத்தமாகவும் தூசி இல்லாமல் வைப்பதும் முக்கியம். தூய்மைக்கு நேர்மறையான ஆற்றலை வழங்குவதில் முக்கியப் பங்குண்டு. ஆமை சிலைகள் நன்மைகளைப் பெருக்க நாணயங்கள் அல்லது படிகங்கள் போன்ற பிற நல்ல பொருள்களுடன் பயன்படுத்துவது மேலும் சிறப்பு.
குறிப்பாக, இருள் சூழ்ந்த படிக்கட்டுகள் அல்லது பீமின் (beam) கீழ் வைப்பதைத் தவிர்க்கவும். இந்தப் பகுதிகள் எதிர்மறை ஆற்றலை உருவாக்கி ஆமை சிலையின் நன்மைகளைத் தடை செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆமை சிலைகள் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றலை வெளியிடுவதாக நம்பப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்வை ஊக்குவிக்க உதவும். அத்துடன், துரதிர்ஷ்டங்களைத் துரத்தி பாதுகாப்பான வாழ்வுக்கு உறுதி தரும் எனும் நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக இந்த ஆமை சிலைகளை வாங்கி வீடுகளில் வைக்கலாம். ஆனால். வீட்டில் எங்கே வைத்தால் நன்மைகள் பெறலாம் என்பதை தகுந்த வாஸ்து நிபுணர் ஆலோசனை கேட்டு அதன்படி வைப்பது நல்லது.