கோயம்புத்தூர் அருகே சென்னி வீரம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
கேவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னி வீரம்பாளையம் திருமா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். 4.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்தநிலையில், இந்தக் குடியிருப்புகளை ஒட்டியுள்ள காய்ந்த புற்களில் நேற்று திடீரென தீ பற்றியுள்ளது.
அந்தசமயம், காற்றும் வேகமாக வீசியதால், தீ வேகமாக பரவத் தொடங்கியது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார், அன்னூர் நிலைய அலுவலர் சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் நிலைய அலுவலர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மொத்தமாக 52 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. வீடுகளிலிருந்த பீரோ, கட்டில் போன்ற அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின. இந்த விபத்து பகலில் நடந்ததால், எந்த விதமான உயிர்ச்சேதமும் இல்லை. வீட்டிலிருந்த அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டதால், அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இல்லை.
இச்சம்பவம் குறித்து அறிந்த கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் குணசீலன் உள்ளிட்டோர் விரைந்து வந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை, குடிநீர் பாட்டில்களை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த மக்கள் பேசுகையில், “எங்களுக்கென்று வீடுகள் இல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் பஞ்சமி இடத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். கடந்த மூன்று வருடங்களாக குடிசை அமைத்து இங்கு வாழ்கிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இன்று அருகிலிருந்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ எங்களது குடிசைகளுக்குப் பரவியது. காற்றின் வேகம் காரணமாகத் தொடர்ந்து 52 வீடுகளுக்கும் பரவியது.
இதனால் வீட்டில் வைத்திருந்த அனைத்துப் பொருட்கள், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின. இதனால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் விழிப் பிதுங்கி நிற்கிறோம். எங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.” என்று பேசினர்.