ஒரு நாட்டில் 5 கொசுக்களைப் பிடித்து கொடுத்தால் இந்திய மதிப்பில் 50 ரூபாய் தருகிறார்களாம்.
இந்தியாவில் ஜனத்தொகையைவிட பல மடங்கு அதிகமாக கொசுத்தொகை இருக்கிறது நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல், உலக முழுவதுமே கொசுவால் ஏற்படும் நோய்களும் அதிகம். பொதுவாக ஏதோ ஒரு விலங்காலோ வேறு எதோ உயிரினத்தாலோ மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், அந்த விலங்கை அழிப்பதில் அரசு கவனம் செலுத்தும். அரசால் மட்டுமே அழிக்க முடியாத அந்த விலங்கை மக்கள் உதவியதால் அழிக்க முடிவு செய்வார்கள். அப்படி மக்களுக்கு குறிப்பிட்ட தொகையும் அறிவிக்கப்படும்.
அப்படித்தான் பிலிப்பைன்ஸில் கொசு தொல்லை அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகரில் அடிஷன் மலை கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்குவால் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இது அந்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இதனால் கொசுவை அழிக்க திட்டமிட்ட அந்த கிராமத்தின் தலைவர் யாரெல்லாம் 5 கொசுக்களைப் பிடித்து கொடுக்கிறார்களோ , அதாவது உயிரோடோ அல்லது உயிரில்லாமலோ அவர்களுக்கு 50 ரூபாய் பரிசு என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர், ஒவ்வொருவரும் கொத்து கொத்தாக கொசுக்களை பிடித்து கொடுத்து பணம் வாங்குகிறார்கள்.
யாருக்கு தெரியும், கொசுவை உற்பத்தி செய்து எத்தனை பேர் பிடித்து கொடுக்கிறார்களோ?
சரி அப்படி பிடிக்கும்போது யாரையாவது கடித்து அவர்களுக்கு டெங்கு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் இருந்தாலும், அந்த கிராமத்து மக்கள் பணம் சம்பாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இந்த கேள்விகளெல்லாம் அவர்களுக்கு தோன்றவா போகிறது.
இங்கு யாராவது இப்படி உத்தரவிட்டால், அனைத்து ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களும் ஒரே இரவில் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். அனைத்து பணக்காரர்களும் ஏழையாக கூட வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில், கொசு தொல்லை தாங்கவில்லை அல்லவா?