
தீவு என்றாலே திகைக்கவைக்கும் அனுபவத்தை கொடுக்கும். நான்கு பக்கமும் நீர் சூழ்ந்து தனிமையில் காட்சி அளிக்கும் அந்த தீவுதேசத்துக்குச் சென்று தனிமை சூழலை ரசிக்க பலரும் விரும்புவார்கள். கடலில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தீவின் பரப்பளவு சுருங்கவோ, விரிவடையவோ செய்யும். ஆனால் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தென்படும் தீவு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த தீவு மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள 'தேவ்பாக்' கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. அதன் பெயர் சீகல் தீவு.
கடற்கரையில் மறைந்திருக்கும் மாணிக்கமான சீகல் தீவு, பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மூழ்கி, அலையின் ஆக்ரோஷம் குறையும்போது 30 நிமிடங்கள் மட்டும் அழகிய மணல் திட்டுபோல் தோன்றி வெளிப்படும். இங்கு சீகல் என்னும் கடற் பறவை உலவுவதால் இந்த தீவுக்கு இந்த பெயரை வைத்துவிட்டனர்.
சீகல் தீவு அதன் அற்புதமான அழகு, வசீகரிக்கும் கால நிலை மற்றும் தனித்தன்மை காரணமாக 'மினி தாய்லாந்து', ‘மறைக்கப்பட்ட சொர்க்கம்’, ‘மர்மத்தால் சூழப்பட்ட ரத்தினம்’ என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கடல் காற்றின் வாசமும், அமைதியான சுற்றுச்சூழலும், சீகல், டெர்ன், கிங்பிஷர் உள்ளிட்ட பறவைகளின் படையெடுப்பும் சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி இயற்கை ஆர்வலர்களையும் பறவை ஆர்வலர்களையும், சாகச ஆர்வலர்களையும் கவர்ந்திழுக்கும்.
சீகல் தீவை இன்னும் சிறப்புறச் செய்வது அதன் அழகிய சுற்றுச்சூழல். அதாவது இங்கு கடல் அலைகள் தொடர்ந்து இருப்பதால் குப்பைகள் எதுவும் இல்லாமல் சுத்தமாக காட்சியளிக்கிறது. அங்குச்சென்று கடல் அழகை ரசித்தபடி மீன் பிடித்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்கிறார்கள்.
இந்த மறைக்கப்பட்ட ரத்தினத்தை அடைய சாலை மற்றும் நீர் பயணத்தின் கலவை தேவைப்படுகிறது. பயணிகள் சாலை அல்லது கொங்கன் இரயில் வழியாக மால்வானை அடையலாம். மால்வானில் இருந்து, சுற்றுலா பயணிகள் தேவ்பாக் கடற்கரைக்கு படகு சவாரி செய்ய வேண்டும். அதற்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். மும்பையிலிருந்து பயணிப்பவர்களுக்கு, தீவு சுமார் 42.5 கிமீ தொலைவில் உள்ளது, அருகிலுள்ள துறைமுகம் நவா ஷேவா ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஆகும்.
குறைந்த அலைகளின் போது மட்டுமே சீகல் தீவுக்கு போக முடியும் என்பதால், அலைகள் எப்போது குறைவாக இருக்கும் என்ற அட்டவணையை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் அங்கு செல்ல சிறந்ததாகும். தினசரி அலைகளின் நேரம் மாறுபடும் என்பதால் பார்வையாளர்கள் தீவிற்குள் காலடி எடுத்து வைக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாமல் இருக்க அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடலில் இருந்து தீவு வெளிப்படுவதைப் பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆஃப்பீட் (offbeat) இடங்களை ஆராய விரும்புவோருக்கு, சீகல் தீவு ஒரு தவிர்க்க முடியாத இடமாகும். அதன் தனித்தன்மை, இயற்கை அழகு மற்றும் ஏராளமான பறவைகள் ஆகியவற்றின் கலவையானது ஒரு தனித்துவமான ஈர்ப்பை உருவாக்குகிறது.