Agmark
Agmark

₹500 போதும்! உங்கள் விளைபொருட்களை அக்மார்க் தரம் ஆக்குங்கள்..!

Published on

விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், அக்மார்க் தரச்சான்று பெறுவதற்கான பதிவு கட்டணம் ₹5000-லிருந்து ₹500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

அக்மார்க் என்பது விவசாய மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் ஒரு சான்றிதழ் ஆகும். இது இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது. இந்த முத்திரை, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அரசு நிர்ணயித்த தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலா பொருட்கள், நெய், தேன், எண்ணெய் மற்றும் மாவு வகைகள் உட்பட 248 அத்தியாவசிய உணவுப் பொருட்களில் கலப்படம் நடைபெறாமல் இருக்க, அக்மார்க் தரச்சான்று வழங்கப்படுகிறது. இந்த முத்திரை, ஒரு பொருள் தரமானது மற்றும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (Farmer Producer Companies - FPCs) தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசி, தேன், மசாலா பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்யும் போது, அவற்றின் தரத்தை உறுதிசெய்ய அக்மார்க் சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த சான்றிதழ் பெற்ற பொருட்கள் பேக்கிங் செய்யப்படும் உறையின் மீது அக்மார்க் முத்திரையை ஒட்டலாம்.

தற்போது இந்த கட்டணக் குறைப்பால், அதிக எண்ணிக்கையிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் பொருட்களுக்கு அக்மார்க் சான்றிதழ் பெற்று, தங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல விலையையும், நுகர்வோரின் நம்பிக்கையையும் பெற முடியும்.

யாருக்கு என்ன பயன்கள்?

  • குறைந்த செலவில் அக்மார்க் சான்றிதழ் பெறுவதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும்.

  • அக்மார்க் முத்திரையுடன் கூடிய பொருட்களை வாங்குவதன் மூலம், நுகர்வோர் தரமான, பாதுகாப்பான உணவுப் பொருட்களைப் பெறலாம்.

  • தரச் சான்றிதழ் பெற்ற தயாரிப்புகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் எளிதாக விற்கப்படும்.

  • சிறு தொழில்முனைவோர்கள் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பதற்றமான சூழ்நிலையிலும் பதறாத மனம்!
Agmark

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், கிருஷ்ணன்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகங்களை அணுகித் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com