

வெளியூர்களுக்கு செல்லும் போது இவர்களை பார்த்து பொருள்களை வாங்காமல் செல்ல முடியாது. உள்ளூரிலும் விலை தரம் காரணமாக இவர்களைத் தேடி வந்து வாங்குபவர்கள் உண்டு. அப்படி நமது வாழ்வோடு கலந்து விட்டவர்கள் தான் நடைபாதை வியாபாரிகள். இவர்கள் விற்காத பொருளே இல்லை எனலாம்.
அன்றாடம் பொருள்களை வாங்கி வந்து சிறு லாபம் வைத்து விற்பனை செய்து அதில் வாழ்க்கை நடத்தும் நடைபாதையின் சிறு வியாபாரிகளுக்காகவே பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டது தான் பிரதமர் ஸ்வநிதி திட்டம்.
குறிப்பாக கொரோனா காலத்தில் வந்த கடுமையான பாதிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், 'பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம் 2020 ஜூன் 1 ஆம் தேதி மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்தப் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பிணையமின்றி கடன் வழங்குதல், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல், அவர்களிடம்டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், வங்கிச் சேவைகளுடன் தெருவோர வியாபாரிகளை இணைத்தல் ஆகியவைகள் உள்ளது.
பயனாளர்களுக்கு திட்டத்தின் முதல் கட்டமாக ₹10,000 வரை செயல்பாட்டு மூலதனக் கடன் வழங்கப்படுகிறது. அதை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் ₹20,000 மற்றும் பின்னர் ₹50,000 வரை கூடுதல் கடன் 7% வட்டி மானியத்துடன் வழங்கப்படுவதுடன் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கேஷ்பேக்காங ஊக்கத்தொகையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறப்பான பயனாளிகளுக்கு UPI-இணைக்கப்பட்ட கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
துவக்கத்தில் சுமார் 50 லட்சம் தெருவோர வியாபாரிகளை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தற்போது இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் 75 லட்சத்து 50 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் பலன் அடைந்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பிணையின்றி ரூ.17 ஆயிரத்து 800 கோடி கடன் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழ்நாடு இந்த திட்டத்தின் செயல்பாட்டில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுவரை சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள் பயனடைந்துள்ளதாகவும் . சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் வியாபாரிகள் இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற்றுள்ளதாகவும் மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சரவை மார்ச் 31, 2030 ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சுமார் 1.15 கோடி பயனாளிகள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது
யார் விண்ணப்பிக்கலாம்?
நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் தெருவோர வியாபாரம் செய்பவர்கள்..
நகராட்சி மற்றும் மாநகராட்சி வழங்கிய விற்பனைச் சான்றிதழ்
அல்லது பரிந்துரை கடிதம் பெற்றவர்கள்
24 மார்ச் 2020-க்கு முன்பே வியாபாரம் செய்தவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொதுச் சேவை மையங்களிலும் சென்று ஆவணங்களை தந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் அறிய இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் PM SVANidhi Portal ஆகும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
இயக்கத்தில் உள்ள மொபைல் எண் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை . (ஏனெனில் ஓடிபி - OTP வரும்).
வாக்காளர் அடையாள அட்டை .
வங்கி கணக்கு புத்தகம்
கூடுதல் சான்று ஏதாவது ஒன்று .
உள்ளாட்சி அமைப்பு வழங்கிய நடைபாதை வியாபாரி அடையாள அட்டை அல்லது சான்றிதழ் .
ஒருவேளை இது இல்லை என்றால் கவலை வேண்டாம்.உள்ளாட்சி அமைப்பிடம் ஆன்லைனில் பெறப்படும் பரிந்துரை கடிதமே போதும்.
இத்திட்டத்தால், பயனாளிகளின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 20 சதவீதம் அதிகரித்து இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பயனாளிகளில் 46 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். 70 சதவீதம்பேர், நலிவடைந்த சமுதாயத்தினர் என்கிறது புள்ளி விபரம் ஒன்று.
இத்திட்டம் பற்றி அறியாத நடைபாதை வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறி அவர்கள் வாழ்வாதாரம் உயர உதவ வேண்டியது நமது கடமை.