காலநிலை மாற்றத்தால் உலகின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில், தற்போது ப்ரேசிலில் ஒருவார காலமாக பெய்து வரும் தொடர் மழையால், இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் 74 பேர் காணாமல் போய் உள்ளனர்.
உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தால், அதிக வெப்பம் அல்லது அதிக மழை என வலுவானப் பேரிடர்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பாலைவனங்களால் சூழப்பட்ட மத்திய கிழக்கு பகுதியில் எப்போதும் வறட்சியே காணப்படும். அங்கு பொதுவாக ஒரு ஆண்டிற்கு சில செமீ அளவு மழை பெய்வதே அதிசயம். ஆனால், இந்தாண்டு மத்திய கிழக்கில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட துபாயில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனையடுத்து சவுதியிலும் அதிகனமழை பெய்தது. அங்கு அதீத காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது தென் அமெரிக்கா நாடான ப்ரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஆகையால், இதுவரை ப்ரேசிலில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தவிர 74 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணத்தில் மொத்தம் உள்ள 497 நகரங்களில் சுமார் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், கட்டடங்கள், சாலைகள் போன்றவை சேதமடைந்துள்ளன. அதேபோல், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், போர்ட்டோ அலெக்ரேவில் உள்ள சர்வதேச விமான நிலையம் காலவறையின்றி மூடப்பட்டுள்ளது. மேலும், கனமழை குறைந்தப்பாடும் இல்லை, வெள்ளம் வற்றுவதற்கான அறிகுறியும் இல்லை என்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.