நாடெங்கும் பாராளுமன்றத் தேர்தல் புயல் கடுமையாக வீசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒடிசா மாநிலத்தில் புயலின் வேகம் இன்னும் சற்று அதிகம். காரணம், அங்கே பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து அந்த மாநில சட்ட மன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள அட்டவணைப்படி ஒடிசாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 21 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து மே மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 26, ஏப்ரல் 29, மற்றும் ஜூன் மாதம் முதல் தேதி வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய முதலமைச்சராக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். இவர் 1996 முதல் ஒடிசாவின் முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். இந்த முறையும், அவர் ஆட்சி அமைத்தால் ஆறாவது முறையாக அவர் முதலமைச்சர் ஆவார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒடிசாவைப் பொறுத்தவரை மற்ற பல மாநிலங்களைப் போலவே காங்கிரஸ் கட்சி பலமிழந்துவிட்டது. கடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தது வெறும் ஒன்பது தொகுதிகள் மட்டுமே. 23 தொகுதிகளில் வென்று, பாஜக எதிர்க்கட்சியாக இருந்தது.
தற்போது, பிஜு ஜனதா தளம் கட்சியில், அதன் தலைவரும், முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வி.கே.பாண்டியன் என்ற தமிழ்நாட்டுக்காரர்தான். ஒடிசாவில் ஐஏஎஸ். அதிகாரியாகப் பணியாற்றிய பாண்டியன், சில மாதங்கள் முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் களத்தில் இறங்கினார்.
“மீண்டும் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் ஒடிசாவில் ஆட்சி அமைப்பது உறுதி. கடந்த சட்ட மன்றத் தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம். பாஜக இன்னமும் தங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் பெயரை பாஜக அறிவித்தால், நாங்கள் இன்னமும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்! மற்ற கட்சிகள் எதுவுமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது என்பது உறுதி!” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் பாண்டியன்!