

கூகுள் சர்ச் (Google Search)இன்ஜின் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. அனைவரின் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் கூகுள் இருப்பது தான் இதற்கு சான்றாகும். கூகுள் சர்ச் என்பது இணையத்தில் தகவல்களைத் தேட உதவும் ஒரு சக்திவாய்ந்த தேடுபொறியாகும். இது பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் பொருத்தமான முடிவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமக்குத் தெரிந்த, தெரியாத தகவல்களைத் தேடுவது முதல் வரலாறு, பொழுதுபோக்கு வரை அனைத்து தகவல்களுக்கும் தற்போது அனைவரும் கூகுளையே நம்பியுள்ளோம். இதனால் உலகிலேயே அதிகமான மக்கள் கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கூகுள் தனது doodle எனும் முகப்பு பக்கத்தில் அடிக்கடி, பயனர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், அதாவது குறிப்பிட்ட நாளில் நடக்கும் நிகழ்வு அல்லது நடந்த நிகழ்வின் அடிப்படையில் பல சுவாரஸ்யமான அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில் தற்போது கூகுள் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள சர்ப்ரைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன் படி நீங்கள் கூகுளில் ‘67’ அல்லது ‘6-7’ என்ற எண்ணை பதிவிட்டு தேடினால் உங்கள் திரையில் ஒரு மேஜிக் நிகழும். இதை கேட்டவுடன் உங்களுக்கு இப்பொழுதே செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதா. இந்த புதிய ட்ரிக்கை அனைவரும் தங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் செய்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அதாவது, செல்போன், லேப்டாப்பில் கூகுள் சர்ச் ஆப்ஷன் போய் 67 அல்லது 6-7 என டைப் செய்து ‛என்டர்' பட்டனை தட்டினால் சில விநாடிகள் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப் ஸ்கீரின் ‛ஷேக்' ஆகும்.
இதனை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். சில வினாடிகளில் ஸ்கிரின் குலுங்குவது நின்றுவிடும். இது முற்றிலும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் தந்துள்ள ‛சர்ப்ரைஸ்'. இதனால் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பிற்கு எந்த பிரச்சனையும் வராது பயப்பட வேண்டாம்.
இந்த அம்சம் கூகுளின் ‘ஈஸ்டர் எக்ஸ்’ (Easter Eggs) எனப்படும் மறைக்கப்பட்ட வசதிகளின் ஒரு பகுதியாகும். பயனர்களை ஆச்சரியப்படுத்தவும், சிரிக்க வைக்கவும் கூகுள் இத்தகைய அம்சங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகிறது.