

உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று காலை பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாகப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பிகியாசைன் பகுதியிலிருந்து ராம்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, மலைப்பாதையின் வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் உள்ளூர் மக்களும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பள்ளத்தாக்கு மிகவும் ஆழமாக இருந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சவால்கள் நிலவின. இருப்பினும், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிக்கியசைனில் இருந்து ராம்நகருக்குச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிரிழந்ததாக மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் வேதனையானது. மனவேதனை அளிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த பயணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.