

ஜார்க்கண்டை சேர்ந்த ஏழு வயது இஷாங்க் சிங் என்கிற சிறுவன், இலங்கையிலிருந்து 29 கி.மீ. தொலைவிலுள்ள பாக் ஜலசந்தியை 9 மணி 50 நிமிடங்களில் கடந்து, மிக இளம் வயதில் அதி வேகமாக நீந்திக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளான்.
உலக சாதனைகள் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சாதனை, 2019-ல் 10 வயது சிறுவன் ஒருவன் படைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடுமையான நீரோட்டங்களையும் கணிக்க முடியாத வானிலையையும் எதிர்த்துப் போராடிய இஷாங்கின் இந்தச் சாதனை, தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளதுடன், இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாகவும் போற்றப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அன்று, இஷாங்க் சிங் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கு 9 மணி 50 நிமிடங்களில் நீந்தி, பாக் ஜலசந்தியைக் கடந்த மிக இளைய மற்றும் அதிவேகமானவர் என்ற புதிய சாதனையைப் படைத்தான். 2019-ல் 10 வயது சிறுவன் 10 மணி 30 நிமிடங்களில் படைத்த சாதனையை முறியடித்த அவனுடைய இந்தச் சாதனையை, உலக சாதனை மன்றம் உறுதி செய்தது. 29 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை, அதன் வலுவான நீரோட்டங்கள், உயரமான அலைகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை ஆகியவற்றால் பெயர் பெற்றது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. இதனால், அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியைச் சேர்ந்த இஷாங்க் சிங் ஒரு நீச்சல் மேதை. இந்த சிறுவன் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி. ஷியாமலி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். இந்த இறுதி நீச்சல் போட்டிக்கு முன்பு, இஷாங்க் தீவிரப் பயிற்சி மேற்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த சிறுவன் ராஞ்சியில் உள்ள துர்வா அணையில் தினமும் குறைந்தது நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்ததாகவும், அவனுக்கு அமன் குமார் ஜெயஸ்வால் மற்றும் பஜ்ரங் குமார் என்கிற இரண்டு பயிற்சியாளர்கள் தீவிர பயிற்சியை அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இஷானின் இந்த வெற்றி, ஒழுக்கத்திற்கும் தனது இலக்கை நோக்கிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது. அவனுடைய இந்த வெற்றியானது, ஜார்க்கண்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை சேர்த்துள்ளது.