பீகாரில் சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
இயற்கை தனது சீற்றத்தை தற்போது உலகெங்கிலும் காட்டி வருகிறது. பல நாடுகளில் வெயில் காரணமாகவும், மழை காரணமாகவும் உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. அதேசமயம் இந்தியாவில் இயற்கை பேரிடரால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, என்று மூச்சுவிடும் சமயத்தில் தற்போது பீகாரில் ஒரு பெரிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுபானியில் 6 பேர், அவுரங்காபாத்தில் 4 பேர், பாட்னாவில் 2 பேர், ரோஹ்தாஸ், போஜ்பூர், கைமூர், சரண், ஜெகனாபாத், கோபால்கஞ்ச், சுபால், லக்கிசராய் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிஎம்ஓ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஒன்பது பேர், ஃபதேபூர் மற்றும் பிரதாப்கரில் தலா மூன்று பேர், எட்டாவில் இருவர் மற்றும் பண்டாவில் ஒருவர். அமேதி மற்றும் சோன்பத்ராவில் பாம்பு கடித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்த மாதம் மட்டும் இதுவரை 70 பேர் இறந்துள்ளனர்.
இதனால், அந்த மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மோசமான வானிலையின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், அவ்வப்போது பேரிடர் மேலாண்மைத்
துறையின் அறிவுரைகளைப் பின்பற்றவும் மக்களை வலியுறுத்தினார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.
வியாழனன்று, தங்களது வகுப்பறைக்கு அருகில் இருந்த பனை மரத்தில் மின்னல் தாக்கியதை அடுத்து பர்கா காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமையும் மோசமாக மழை பெய்யும் என்றும், மின்னல் ஏற்படும் என்றும் கணித்தனர். அதேபோல் இன்றும் மழைக் கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.