
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் என சினிமா துறையை சேர்ந்த அனைவருக்கும் தேசிய விருதானது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு, 2023-ம் ஆண்டுக்கான (71வது) தேசிய திரைப்பட விருதுகளை தற்போது அறிவித்துள்ளது. விரைவில் இந்த தேசிய விருதுகளை குடியரச்சுத் தலைவர் டெல்லியில் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை ஒரே படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. யார், யாருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
* அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. இந்த படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசுடன் வெள்ளித்தாமரை விருது கிடைக்கும்.
* பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி ’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இயக்குநர் Sudipto Sen-க்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘ஜவான்’ படத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் ‘12த் பெயில்’ பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோருக்கு பகிர்ந்தளிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது. இவர்களுக்கு வெள்ளித்தாமரை விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதனை இவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 35 ஆண்டாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது. ‘திருமதி சட்டர்ஜி வெர்சஸ் நார்வே’ என்ற இந்திப்படத்துக்காக இவர் வெள்ளித்தாமரை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
* 'KATHAL' படத்துக்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது.
* சிறந்த துணை நடிகருக்கான விருது பூக்காலம் என்ற மலையாள படத்தின் நடித்த நடிகர் விஜயராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
* அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2023-ம்ஆண்டு வெளியான ‘பகவந்த் கேசரி’ படம் சிறந்த தெலுங்கு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
* வைஷ்ணவி சைதன்யா, ஆனந்த் தேவரகொண்டா மற்றும் விராஜ் அஸ்வின் நடிப்பில் உருவான தெலுங்கு படம் ‘பேபி’. சிறந்த எழுத்தாளருக்கான விருது சாய் ராஜேஷ் நீலத்திற்கு கிடைத்துள்ளது.
* தமிழில் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான ‘வாத்தி’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷூக்கு இது 2-வது தேசிய விருதாகும். இதற்கு முன் சூரரைப்போற்று படத்தின் பின்னனி இசைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* ‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி இருவரும் இணைந்து நடிப்பில் மிரட்டிய ‘உள்ளொழுக்கு’ என்ற திரைப்படத்திற்கு சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருது மற்றும் ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* சிறந்த தயாரிப்புக்கான தேசிய விருதை மலையாளப் படமான ‘2018’ வென்றுள்ளது.
* Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான ‘லிட்டில் விங்ஸ்’ சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சரவண மருது சவுந்தரபாண்டின் மற்றும் மீனாட்சி சோமன் இந்த விருதை வென்றுள்ளனர்.
* சிறந்த கலை, பண்பாட்டு திரைப்படத்துக்கான தேசிய விருதை கமக்யா நாரயண் சிங் இயக்கிய ‘டைம்லெஸ் தமிழ்நாடு’ (Timeless Tamil Nadu) என்ற படம் வென்றுள்ளது.
* சிறந்த கன்னடத் திரைப்படத்திற்கான தேசிய விருது கண்டீலு திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
* சிறந்த சண்டைப்பயிற்சிக்கான விருது ஹனுமன் தெலுங்கு படத்தின் சண்டை பயிற்சியாளர் நந்து பிருத்விக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.