
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்து 2023-ம் ஆண்டு வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சந்தித்தது. பொருளாதாரம் சரிந்தது. ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து தெருவிற்கு வந்தனர். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரசில் உருமாற்றங்கள் ஏற்பட்டு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால், அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறைவாக பதிவாகிய நிலையில், தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. ‘கடந்த 7 நாட்களில் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் 5,037 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்தது. இந்தியாவிலும் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 19-ந்தேதி, நாடு முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்த நிலையில் கடந்த ஒரே வாரத்தில் புதிதாக 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலில், இந்தியாவில் 1,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகபட்சமாக, கேரளாவில் தான் 430 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிரா 209 பேர், டெல்லியில் 104 பேர், குஜராத்தில் 83 பேர், தமிழ்நாட்டில் 69 பேர், கர்நாடகாவில் 47 பேர் என இந்த மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 4 பேரும், கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக, டெல்லி, கேரளா, குஜராத், மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பரவல் குறைவாகவே காணப்படுவதால் மக்கள் அச்சம் அடையத்தேவையில்லை.
மிகச் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையை சேர்ந்த ஜெ.என்.1 வகை தொற்றுகளே பரவலாக காணப்படுவதால், மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில் செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது கிடையாது. இணை நோய் பாதிப்பு உடையவர்கள் அதாவது நீரிழிவு, இதயநோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்பது வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறை தான். ஆனால் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
அறிகுறிகள் பெரும்பாலும் முந்தைய ஓமிக்ரான் துணை வகைகளில் காணப்பட்டதைப் போலவே இருக்கும். இருப்பினும், சரியான முறை நபருக்கு நபர் வேறுபடலாம்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு, உடல் அல்லது தசை வலிகள், பலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற இரைப்பை குடல் அறிகுறிகள் தென்படலாம்.