சீனாவில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள் - இந்தியாவிலும் பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா
கொரோனா
Published on

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் அமைதியாக இருந்த டெல்லி, மும்பை, பெங்களூரு, கர்நாடகா, அரியானா மற்றும் கேரளா போன்ற நகரங்களில் புதிய கொரோனா பாதிப்புகள் எழுந்து கவலைக்கிடமான நிலை உருவாகியுள்ளது. ஆனால், அதிகாரிகள் பயப்பட தேவையில்லை என்றாலும், மருத்துவமனைகள் எச்சரிக்கையில் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிகள் மீண்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் கொரோனா பாதித்த லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள். இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று மீண்டும் பல நாடுகளை மிரட்டி வருகிறது. நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக 2 வகை கொரோனா மாறுபாடு வைரஸ்களை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

அந்தவகையில் என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகிய 2 கொரோனா திரிபு வைரஸ்களால் இந்த பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதன்படி என்பி.1.8.1. வைரஸ் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கும், எல்எப்.7 வகை வைரஸ் குஜராத்தில் 4 பேருக்கும் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மாறுபாடுகள் கண்காணிப்பின் கீழ்தான் இருப்பதாகவும், அவை அபாயமானவையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல் மற்றும் இணை நோய் பாதிப்பு உடையவர்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கொரோனா - ஒரு சுவாரஸ்யமான ஃபிளாஷ் பேக்!
கொரோனா

சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்களுக்கு 3 அல்லது 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கட்டாயம் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மகாராஷ்டிராவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக 45 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மும்பையில் 35 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே தானேயை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் கொரோனா… இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடம்!
கொரோனா

இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் ஒட்டு மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்ததன் மூலம் கர்நாடகா கொரோனாவுக்கு முதல் பலியை பதிவு செய்துள்ளது.

அதேபோல் கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்த மாநில சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் கோவேக்சின் தடுப்பூசிகள் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுசித்ரா பல்லா கூறுகையில், “புதிய ரக கொரோனா பரவல் குறித்து கவனித்து வருகிறோம். அரசு கேட்டுக்கொண்டாலும், நாட்டு மக்களுக்கு தேவைப்பட்டால் தடுப்பூசிகளை மீண்டும் தயாரிக்க ஆவலாக உள்ளோம்” என்றார்.

சமூக வலைதளங்களில், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தவறான தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் சுகாதாரத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்தியும் உண்மை இல்லை எனவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உருமாறும் கொரோனா வைரஸ் - பயப்பட வேண்டாம்... பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com