தெலங்கானாவில் சுரங்க விபத்து ஒன்று ஏற்பட்டு கடந்த சில நாட்களாக அதில் இருந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து தற்போது 8 பேரும் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.
அன்றாடம் உலகில் பல விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், சுரங்க விபத்துக்கள் போன்றவை ஏற்பட்டால், பணியாளர்களை மீட்பதென்பதே கஷ்டமாகிவிடும். அப்படிதான் தெலங்கானா மாவட்டத்திலும் நடைபெற்றது.
தெலங்கானாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நல்கொண்டா மாவட்டத்துக்கு ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையேதான் நாகர் கர்னூல் மாவட்டம் தோமலபென்ட்டா என்ற பகுதியில் சுரங்கம் கட்டுமானப் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில், 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 2 பொறியாளர்கள், 2 ஆபரேட்டர்கள், 4 தொழிலாளர்கள் என மொத்தம் 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
சுமார் 8 முதல் 10 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால், சுரங்கப்பாதை சேரும் சகதியுமாக இருந்ததால், தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டனர். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை தேடுவதற்காக அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மற்றும் எண்டோஸ்கோபி கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஐந்து நாட்களுக்கு முன்னரே, இன்னும் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது அந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால், அதிகாரப்பூர்வமாக அவர்களின் இறப்பு செய்தி அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் 44 கிலோ மீட்டர் நீளம் கொண்டது . இதற்காக தோண்டப்படும் சுரங்கத்தின் முகப்பிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பக்க வாட்டில் ஏற்பட்ட உடைப்பினால் தண்ணீர் சுரங்கம் முழுவதும் நிரம்பியது. தண்ணீர் கலந்த மண் சுரங்கத்தில் 200 முதல் 300 மீட்டர் அளவில் பரவியுள்ளது. சுரங்கம், நிலத்தின் மேற்பரப்பிலிருந்து 500 அடி ஆளம் கொண்டது 200 மீட்டர் அளவிற்கு சுரங்கத்தின் மேற்கூரை சரிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.