

இந்தியாவில் சமீப காலமாக மோசடி கும்பல் புதிய, புதிய வழிகளை கண்டறிந்து மக்களை ஏமாற்றி பணத்தை பறித்து வருகிறார்கள். மக்களும் குறுக்கி வழியில் எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில், மோசடி வலையில் விழுந்து பணத்தை இழந்து பரிதவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அதுவும் சமீபகாலமாக பெண்களை அதுவும், இல்லத்தரசிகளை குறிவைத்து இந்த மோசடிகள் அரங்கேறி வருகிறது. தினமும் செய்தித்தாள்களில் இதுபோன்ற மோசடிகள் குறித்த செய்திகள் வருவதும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அடிக்கடி அறிவுறுத்தி வந்தாலும் இதுபோன்ற மோசடி சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்பது தான் நிஜம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள், இது எந்த காலகட்டத்திலும் மாறாது என்பது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்தேரியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு நாள் முழுவதும் வீட்டில் பொழுதை வீணாக கழிப்பதற்கு பதிலாக ஏதேனும் பார்ட் டைம் வேலை அல்லது வீட்டிலிருந்தே வேலை கிடைத்தால் அந்த வருமானம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கான செலவுக்கும் உதவியாக இருக்குமே என்ற எண்ணத்தில் இல்லத்தரசிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வகையிலான வேலைகளை தேடி வருகின்றனர்.
இது போன்ற பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளை குறிவைத்து வீட்டில் இருந்தே பார்க்கும் வகையிலான வேலை (WFH) வாங்கித் தருவதாக கூறி மோசடி கும்பல் பெண்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இது போன்ற ஒரு சம்பவத்தில் 8000 பெண்களிடம் ரூ.12 கோடி வரை மோசடி செய்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பாபாசாகேப் கோலேகர் என்பவர் கர்நாடகத்தின் பெலகாவியில் கிராமப்புறங்களில் வசிக்கும் இல்லத்தரசிகள், படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களிடம் வீட்டில் இருந்து வேலை பார்த்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைகளை அள்ளி வீசி உள்ளார். அதற்காக நீங்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு சிறு வேலைகளை செய்து எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதற்காக ஒவ்வொருவரும் 2500 முதல் 5000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் இந்த வேலைக்கு உங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்து விட்டால் கூடுதல் போனஸ் கிடைக்கும் என்றும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி தூண்டில் போட்டுள்ளார். இதனை உண்மை என நம்பிய பெண்கள் பலரும் அவருக்கு பணத்தை அனுப்பியதுடன், பலரையும் இதில் சேர்த்துள்ளனர். இவ்வாறு மோசடி நபரிடம் ஏமாந்து பணம் அனுப்பிய பெண்கள் ஒன்று, இரண்டல்ல, கிட்டத்தட்ட 8000 பெண்கள் பணம் அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு பணம் அனுப்பிய பெண்கள் நீண்ட நாட்களாக வேலை எதுவும் கிடைக்காததால் பாபாசாகேப்பை தொடர்புகொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் அந்த பெண்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் செய்வதறியாது தவித்த பெண்கள் இதுகுறித்து பெலகாவி போலீசில் அடுத்தடுத்து புகார் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தான், பாபாசாகேப் அதுபோல் சுமார் 8000க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு ரூ.12 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததும், தற்போது தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்ததுள்ளது.
வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம், என்பது போன்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இல்லத்தரசிகள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.