

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) என்பது அனைத்து வருவாய் பிரிவினருக்கும் (EWS, LIG, MIG, HIG) மலிவு விலையில் தரமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளை வழங்கும் ஒரு அரசு அமைப்பாகும். இது தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுகிறது. 1961-ல் நிறுவப்பட்ட இந்த வாரியம், சென்னை அண்ணா சாலை (நந்தனம்) தலைமையிடமாகக் கொண்டு, நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை மக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குகிறது. அதாவது, ‘அனைவருக்கும் வீடு’ என்ற அடிப்படையில், குறைந்த,நடுத்தர வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முக்கியத்துவம் அளித்து வீடுகளை உருவாக்குகிறது. அந்த வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG), நடுத்தர வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவு (HIG) என வகைப்படுத்தி வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
குறிப்பாக, TNHB ஆல் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50% க்கும் அதிகமானவை சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காகவே உள்ளன. அந்த வகையில் TNHB இன் பல்வேறு திட்டங்களால், லட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாகும் தங்கள் கனவை நனவாக்கி உள்ளனர்.
புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் மற்றும் ஏலம் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் https://tnhb.tn.gov.in/all-notifications அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மக்கள் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை அந்தந்த மண்டல அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் குலுக்கல் முறை (Lottery) அல்லது மின்னணு ஏலம் (e-Auction) மூலம் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த 3-ம்தேதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதாவது கோட்டூர்புரம், அப்பாவு நகர், சுப்புபிள்ளை தோட்டம், ராயபுரம் தொகுதியில் செட்டித் தோட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் முல்லை நகர் திட்டப்பகுதி, வால்பாறை தொகுதியில் வால்பாறை, மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் கரடிக்கல், திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெயில்பேட்டை பகுதி-2 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.840.76 கோடியில் கட்டப்பட்ட 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள மக்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கோவை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் TNHB திட்டம் மூலம் மானிய விலையில் வீடு வாங்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை..
* விண்ணப்பதாரர் 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
* தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும்.
* எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் வேறு எந்த மாநில அரசின் வீட்டுத் திட்டங்களின் மூலமாகவும் எந்தவொரு சொத்து அல்லது மனைகளையும் வைத்திருக்கக் கூடாது.
* சம்பளம்: ரூ.25,000 - ரூ.70,000 வரை பெறுபவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் சொந்த வீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் சொந்த வீடு வாங்க விண்ணப்பிக்க விருப்பம் உள்ள கோவை மாவட்ட மக்கள் <<https://propertysales.tnhb.tn.gov.in/customer-enquiry>> என்ற இணையதளத்திற்கு சென்று அதில் உங்களது பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் போன்ற தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.