

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாள் கனவாகவே இருக்கும் என்று சொல்லலாம். அதுவும், நடுத்தர மற்றும் சமானிய மக்களுக்கு அது ஒரு வாழ்க்கை போராட்டம். விலைவாசி உயர்வு, நிரந்தர வேலையின்மை, பொருளாதார பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் சொந்தமாக ஒரு நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டுவது என்பது தற்போதுள்ள காலகட்டத்தி சாதாரண காரியம் கிடையாது.
அந்த வகையில் வீடு இல்லாத மக்களின் குறையை போக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு இலவச வீடு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகின்றன.
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்(TNHB) முக்கிய பங்காற்றி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் மனைகளை நியாயமான விலையில் வழங்கி வரும் தமிழக அரசு சார்ந்த அமைப்பில் ஒரு வீட்டை பெறுவதற்கான முழுமையான செயல்முறைகள் மற்றும் தகுதிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்க(Tamil Nadu Housing Board Scheme) யாரொல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பத்தாரர்கள் சில அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும்.
* 21 வயதை பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
* விண்ணப்பத்தாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் சொந்த வீடு அல்லது மனைகள் இருக்கக்கூடாது.
* வேறு எந்த அரசுத் திட்டத்திலும் வீடு வைத்திருக்கக் கூடாது.
* விண்ணப்பதாரர் சம்பளம் வாங்கும் நபராகவும், நிலையான வருமானம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
* ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
* விண்ணப்பதாரரின் வருமானம் அடிப்படையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு(EWS), குறைந்த வருவாய் பிரிவு(LIG), நடுத்தர வருவாய் பிரிவு (MIG), உயர் வருவாய் பிரிவு(HIG) என்ற அடிப்படையில் அதற்கான வருமான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானத்திற்கு ஏற்ப பல்வேறு வகை குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, பொருளாதார பின்தங்கிய பொதுப்பிரிவினர் (EWS) குடியிருப்புகளை பெற விண்ணப்பதாரர் மாதம் ரூ.12,000 வரை சம்பளம் வாங்க வேண்டும். அதேபோல், LIG பிரிவு விண்ணப்பதாரர் மாதம் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரையும், MIG பிரிவு விண்ணப்பதாரர் HIG பிரிவு விண்ணப்பதாரர் மாதம் ரூ.37,000 முதல் ரூ.62,000 வரையும் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டியது கட்டாயம்.
தேவையான ஆவணங்கள்
அடையாளச் சான்று (ஆதார், PAN அட்டை, வாக்காளர் அட்டை).
முகவரிச் சான்று (ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டண ரசீது).
வருமானச் சான்று.
பூர்வீகச் சான்று (Nativity Certificate).
வங்கி விவரங்கள்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
சொந்தமாக அரசுத் திட்டத்தில் சொத்து இல்லை என்பதற்கான உறுதிமொழிப் பத்திரம்.
விண்ணப்ப செயல்முறை
TNHB அலுவலகங்கள் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அல்லது TNHB அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tnhb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். முதலில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhb.tn.gov.in/ என்ற ஆன்லைன் முகவரியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதில் அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், பத்திரிக்கை செய்திகள் போன்றவை இந்த இணையதளத்தில் தான் வெளியிடப்படும்.
அந்த அறிவிப்பில் திட்டத்தின் இருப்பிடம், வீடுகளின் வகை, விலை, விண்ணப்ப கட்டணம் மற்றும் கடைசி தேதி போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆன்லைனில் பதிவு செய்தல்
இணையதளத்தில் உங்கள் பெயர், ஆதார் எண், பான் எண், மற்றும் மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை அளித்து ஒரு பயனர் அவரது பெயரில் கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட குடும்பம் மற்றும் வருமான விவரங்களை ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவுடன் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து, குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆரம்ப வைப்பு தொகையை ஆன்லைன் மூலமாக நீங்கள் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய வீடுகளில் எண்ணிக்கையை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குலுக்கல், பொது பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
அதன்பிறகு, மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரே தவணையாகவோ அல்லது வங்கி மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றோ செலுத்த வேண்டும். முழு தொகையும் செலுத்தப்பட்ட பிறகு விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டு வீடு உங்கள் பெயருக்கு மாற்றப்படும்.
அதாவது, ஒதுக்கீடு பெற்றவர் உத்தரவு பெறப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் 40 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை 5 முதல் 14 ஆண்டுகள் வரையிலான இஎம்ஐ செயல்முறை மூலம் வட்டியுடன் சேர்த்து செலுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை தவணை தொகையை கட்டவில்லை என்றாலோ, தவணை செலுத்த வேண்டிய தேதிக்குப் பிறகு செலுத்தினாலோ, TNHB விதிகளின் படி தவணை தொகைக்கு உண்டான வட்டி வசூல் செய்யப்படும்.
நிபந்தனைகள்
* இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்கியவர்கள் அந்த வீடு அல்லது பிளாட் அல்லது வீட்டு மனையை 10 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது.
* அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீ செய்யப்பட்ட பிறகு, ஒதுக்கீடு பெற்றவர் கொடுத்த விவரங்கள் தவறாக இருந்தால் அந்த ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு இந்த தகுதிகளின் அடிப்படையில் தான் வீடு வழங்கப்படுகிறது.