

மத்திய அரசு ஊழியர்களும் மற்றும் ஓய்வூதியதாரர்களும் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் என்னவென்றால் எப்போது 8-வது சம்பள கமிஷன்(8th Central Pay Commission - CPC) வரும் என்பது தான். அதனுடன் சேர்த்து நம்முடைய அகவிலைப்படியே அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பார்களா என்பது போன்ற பல கேள்விகளும் அவர்களிடையே எழுந்துள்ளது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2016-ல் அமலுக்கு வந்த 7வது ஊதியக்குழு வரும் டிசம்பர் 31-ம்தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026-ல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மற்றும் அரியர் தொகை எப்போதிருந்து வழங்கப்படும் என்பது குறித்த கேள்விகளுக்கு மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தமாக 1.2 கோடிக்கும் மேற்பட்டோர் எப்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வும், 8வது ஊதியக் குழுவின் பலன்களும் கிடைக்காது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலான நிலையில், மத்திய அரசு மற்றும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் 8வது ஊதியக்குழு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, 8வது ஊதியக் குழுவின் பணிக்கால வரையறைகளில் இருந்து ஓய்வூதிய திருத்தம் நீக்கப்பட்டுவிட்டதாக எழுந்த கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும், ஓய்வூதிய திருத்தமும், மற்ற ஊதியச் சீர்திருத்தங்களுடன் சேர்ந்து, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத் தேதி குறித்து அரசாங்கம் விரைவில் முடிவு செய்யும் என்றும் ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ஆனால் அதேசமயம் நிலுவைத் தொகை ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படுமா அல்லது அதற்குப் பிந்தைய தேதியிலிருந்து கணக்கிடப்படுமா என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.
கடந்த மாதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 8வது ஊதியக் குழுவின் பணிக்கால வரையறைகளுக்கு ஒப்புதல் அளித்தது. முந்தைய ஊதியக் குழுக்கள் அமல்படுத்தப்பட்ட காலக்கெடுவைப் பார்த்தால், ஒரு குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் பொதுவாக 18 முதல் 24 மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. அதன்படி, அறிக்கை 2027-ம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இந்த அமலாக்கத்தில் ஏற்படும் தாமதம், திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் முழுப் பலன்களையும் தாங்கள் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தை ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.