
நாட்டில் பென்ஷன் வாங்குவோர், ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்தச் சான்றிதழின் அடிப்படையில் தான் பென்ஷன் வாங்குவோர் உயிருடன் இருக்கிறார் என்பதை ஓய்வூதிய நிறுவனங்கள் உறுதி செய்யும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆயுள் சான்றிதழைப் பெற ஓய்வூதியதாரர்கள், நேரில் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. மத்திய அரசு அவ்வபோது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (Digital Life Certificate) பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பென்ஷன் வாங்குவோருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வீடு தேடி வரும். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை 4வது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. இதன் மூலம் ஆயுள் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாகும்.
பென்ஷன் வாங்குவோர் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் அவர்களை சென்றடைய வேண்டும் என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் சுமார் ஒரு மாதத்திற்கு நடைபெறும் இந்த பிரச்சாரத்தை, பென்ஷன் வாங்குவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியதாரர் நலச் சங்கங்கள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஆதார் அமைப்பு, ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இந்தப் பிரச்சாரத்தை மத்திய அரசு நடத்தவுள்ளளது.
பெரும்பாலும் பென்ஷன் வாங்குவோர் மூத்த குடிமக்கள் என்பதால், அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் மாற்றியது மத்திய அரசு. டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை பென்ஷன் அளிக்கும் நிறுவனத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இது முற்றிலும் டிஜிட்டல் முறை என்பதால் பென்ஷன் வழங்கும் நிறுவனங்கள், ஆயுள் சான்றிதழை தானாகவே செயல்படுத்தி விடும்.
'பிரமான்-ஐடி' எனும் தனித்துவ அடையாள எண், அனைத்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களிலும் இருக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற 3வது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரததில் 1,900 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த முகாம்களில் நாடு முழுக்க 800-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சுமார் 1.62 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 50 லட்சத்திற்கும் மேலான ஆயுள் சான்றிதழ்கள், முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை நாடு முழுக்க 2,000 மாவட்டங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெறுவோரின் எண்ணிக்கை பெருமளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0’ குறித்து மேலும் அறிந்து கொள்ள பென்ஷன் வாங்குவோர் ippbonline.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பென்ஷன் வழங்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் முகம் மற்றும் கைரேகை சார்ந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்கும் மொபைல் சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, இந்த சேவையை மத்திய அரசு வழங்கும்.
இம்முறை 2 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மறறும் விளம்பரங்களின் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு.