
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் மட்டும் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அங்கு வசிப்பவர்கள் கவலையோடு இரவு முழுவதும் விழித்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
வியாழக்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ‘டோகரா தீவுகளைச் சுற்றிய கடற்பகுதிகளில் நிலநடுக்க செயல்பாடுகள் "மிகவும் தீவிரமாக" இருப்பதாக கூறிய அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 21-ம்தேதி தொடங்கிய தற்போது வரை 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் ஜூன் 23ம் தேதி மட்டும் 183 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஜூன் 29ம்தேதி 98 முறை நிலநடுக்கமும் மற்றும் ஜூன் 30-ம்தேதி அன்று மட்டும் 62 நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதன் முதலில் கடந்த 21-ம்தேதி தொடங்கிய நிலநடுக்கம் ஜூன் 30-ம்தேதி வரை நீடித்ததாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. ஆனால் இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை, சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை, ஆனால் அதேசமயம் அந்த பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையுடனும், எப்போது வேண்டுமானாலும் அங்குள்ள மக்கள் வெளியேற தயாராக இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்க்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.
கடந்த காலங்களிலும் டோகாரா பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், மிக அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் தொடர்ச்சி அசாதரணமானதாக உள்ளதாக கூறிய உள்ளூர்காரர், ‘எப்போதுமே ஆடிக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது' என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக நிலநடுக்கங்களை கணிப்பது மிகவும் கடினம், ஆனால் ஜனவரியில் ஒரு அரசாங்கக் குழு, அடுத்த 30 ஆண்டுகளில் ஜப்பானுக்கு அருகே உள்ள நான்கை பள்ளத்தாக்கில் ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கான வாய்ப்பு 75 முதல் 82 சதவீதம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இதுபோன்ற ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் சுனாமியால் 298,000 பேருக்கு மேல் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.