சமீபகாலமாக இந்தியாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் 40,50 வயதை தாண்டி வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதிலேயே, அதாவது 20 வயதிலேயே மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தேரி வருகிறது.
உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது உயிரிழப்பது, நடனமாடிக்கொண்டிருக்கும் போது, பேசிக்கொண்டிருக்கும் போது, நடந்து கொண்டிருக்கும் போது அப்படியே கீழே சரிந்து உயிரிழப்பது என நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளை பார்த்திருப்போம். பொதுவாக மாரடைப்பு அல்லது இதயச் செயலிழப்பு ஏற்படும் போது சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காத போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட உயிரிழப்பிற்கு, மாறிவரும் வாழ்க்கை முறை, தூக்கமின்மை, அதிகநேரம் வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,கிட்டத்தட்ட 99% மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்ப் பாதிப்பு ஏற்படுவதற்கு இந்த 4 விஷயங்கள் தான் முக்கிய காரணம் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு உள்ளிட்ட இதய செயலிழப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருவதால் அது சம்பந்தமான ஆய்வுகளில் உலகநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே உயிரைப் பறிக்கும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற முக்கிய இதயச் செயலிழப்பு ஏற்பட கிட்டத்தட்ட 99% உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, அதிக ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் புகையிலை பயன்படுத்துவது ஆகியவை மட்டுமே காரணமாக இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமானோரின் டேட்டாவை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதய நோய் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதயச் செயலிழப்பு கண்டவர்களில் 93%க்கும் அதிகமானோருக்கு ஹைப்பர்டென்ஷன் முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 95%க்கும் மேல் இதயப் பிரச்சனை உள்ள 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஹைப்பர்டென்ஷன் இருந்துள்ளது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஃபைன்பெர்க் மருத்துவப் பள்ளி(Northwestern University Feinberg School of Medicine) இதயவியல் பேராசிரியரும், மூத்த ஆய்வாளருமான டாக்டர் பிலிப் கிரீன்லேண்ட்(Dr Philip Greenland) கூறுகையில், ‘இந்த 4 காரணங்களில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் இருந்தாலே கிட்டத்தட்ட 100% இதய நோய்கள் ஏற்பட்டுவதாக இந்த ஆய்வுகள் எடுத்துகாட்டுவதாகவும்,
எளிதாகச் சிகிச்சை அளிக்க முடியாத மற்ற விஷயங்களைத் தேடிச் சரி செய்வதற்குப் பதிலாக இந்த நான்கையும் கட்டுப்படுத்தினாலே இதயப் பாதிப்பைக் குறைக்கலாம்’ என்றார்.
அதாவது, உயிருக்கு ஆபத்தான இதயப் பிரச்சனைகளைத் தடுக்க, பொதுவான இந்த நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து, நிர்வகிக்க வேண்டும் என்பதையே இந்த புதிய ஆய்வுகள் நமக்கு வலியுறுத்துகின்றன.
எந்தவொரு சிக்கலும் இல்லாத போதிலும் சில காலமாக இதயப் பாதிப்புகள் அதிகரிப்பதாக சமீபத்தில் வெளியான சில ஆய்வுகளின் முடிவுகளை ஏற்க மறுத்த கிரீன்லேண்ட், நிச்சயம் உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, அதிக ரத்த சர்க்கரை அளவு மற்றும் புகையிலை பயன்பாடு ஆகியவையே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதைத் தங்கள் ஆய்வுகள் உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதயச் செயலிழப்பு வராமல் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, உடலில் அதிகளவு கொழுப்பு சேராமலும், சர்க்கரை அளவு கூடாமலும், புகையிலை பயன்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டாலே மாரடைப்பு ஆபத்தையே இல்லாமல் செய்துவிடலாம்.
அதேசமயம், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதயச் செயலிழப்பு போன்ற ஏதாவது உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடாமல் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ செல்வது நல்லது.