

தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. ஏனெனில் அந்த கால கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம் என்பதால் விசைப்படகுகளின் எந்திர இரைச்சல் மற்றும் ராட்சத வலைகளால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை கடலுக்கு 'ஓய்வு' அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன் பிடி தடைக்காலம் வருகிற 15-ந்தேதி(புதன் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து கிழக்கு கடல் பகுதியில் புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் கிராமம் வரையிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் மீன் பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது.
மேலும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே காலத்தில் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
எனவே தடைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஆழ் கடலில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் ஏப்ரல் 14-ந்தேதி இரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனை கடைபிடிக்காமல் தடையை மீறும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மீன் தடையின் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது என்பதால், தடைக்காலத்திற்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஏப்ரல் 12) சென்னை காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப் பேட்டை உள்ளிட்ட மீன் சந்தைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியதுடன், மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, மராமத்து பணி, வலைகளை சீரமைப்பது, படகுகளுக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.